கோலி மீது வங்கதேச வீரர் பரபரப்பு புகார்… ‘ஆக்ஷன் எடுத்திருந்தால் நாங்க ஜெயிச்சிருப்போம்’ : சர்ச்சையை கிளப்பும் புதிய குற்றச்சாட்டு..!!

Author: Babu Lakshmanan
3 November 2022, 1:58 pm
Quick Share

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று அடியெல்டில் நடைபெற்ற ஆட்டத்தில் வங்கதேச அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்கடித்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி, கோலி (64 நாட் அவுட்), ராகுல் (50) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் சேர்த்தது.

பின்னர், கடின இலக்கை நோக்கி விளையாடி வங்கதேச அணி முதல் 7 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 66 ரன்கள் எடுத்து அதிரடி காட்டியது. இந்த சூழலில், மழை குறுக்கிட்டதால், D/L முறைப்படி ஓவரும், இலக்கும் குறைக்கப்பட்டது.

அதன்படி, 16 ஓவர்களில் 151 ரன்கள் இலக்காக தீர்மானிக்கப்பட்டது. அதாவது, வங்கதேச அணி 54 பந்துகளில் 85 ரன்கள் எடுக்க வேண்டி இருந்தது. பின்னர், மீண்டும் ஆட்டம் தொடங்கிய பிறகு, இந்திய அணியின் கையே ஓங்கியது. வங்கதேச வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்தனர். இதனால், அந்த அணியால் 16 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம், 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று, அரையிறுதிக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டது.

இந்த நிலையில், விராட் கோலியின் மீது ஆக்ஷன் எடுத்திருந்தால், நாங்கள் வெற்றி பெற்று இருப்போம் என்று வங்கதேச அணியின் வீரர் நுருல் ஹாசன் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அதாவது, வங்கதேச அணி பேட்டிங் செய்து கொண்டிருக்கும் போது, 7வது ஓவரில் நடந்த சம்பவத்தை குறிப்பிட்டு, அவர் இதுபோன்ற குற்றச்சாட்டை வைத்துள்ளார். லிட்டன் தாஸ் அடித்த ஷாட்டை ஃபீல்டிங் செய்த அர்ஷ்தீப் சிங் பவுலர் பக்கம் நோக்கி பந்தை வீசியுள்ளார். ஆனால், அந்த பந்து கோலியின் பக்கம் வந்து விழுந்ததால், அதனை பிடித்து வேகமாக ஸ்டம்ப் பக்கம் வீசுவது போன்ற சைகையை கோலி காண்பித்துள்ளார்.

கிரிக்கெட் விதிமுறைகளின்படி, இதுபோன்ற ஃபேக் ஃபில்டிங் செய்வதன் மூலம், பேட்டர்களின் கவனம் சிதறிடிப்பதாக கருதப்பட்டு, 5 ரன்கள் எதிரணிக்கு வழங்கப்படும்.

ஆனால், கோலியின் இந்த செயலை வங்கதேச பேட்டர்கள் கவனிக்காததால், அவர்கள் ஏமாற்றப்படவில்லை. இருப்பினும், கோலியின் மீது நடவடிக்கை எடுத்தால், 5 ரன்கள் அபராதமாக வங்கதேச அணிக்கு கிடைத்திருக்கும் என்றும், இதன்மூலம், அந்தப் போட்டியில் வெற்றி பெற்றிருக்கலாம் என்று கூறுகிறார் வங்கதேச வீரர்.

இதனிடையே, இந்திய அணி ஏமாற்றி வெற்றி பெற்று விட்டதாகக் கூறி, வங்கதேச ரசிர்கள் CHEATING என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருவதுடன், பிசிசிஐ மற்றும் ஐசிசி-யையும் கடுமையாக விமர்சித்து டுவிட் போட்டு வருகின்றனர்.

Views: - 553

7

6