மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சவுரவ் கங்குலி!

31 January 2021, 2:54 pm
Quick Share

பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலிக்கு மாரடைப்பு காரணமாக சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதன் காரணமாக கங்குலிக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து ஐந்து நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற பின்னர் வீட்டுக்கு திரும்பினார்.

இவரின் உடல் நிலையை தொடர்ந்து மருத்துவர்கள் ஆராய்ந்து, அடுத்த கட்ட சிகிச்சை மேற்கொள்ள இருந்த நிலையில், மீண்டும் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து கங்குலி மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவரின் உடல் நிலையை ஆய்வு செய்த மருத்துவர்கள் இவருக்கு மேலும் இரண்டு ஸ்டென்ட் பொருத்தினர். இவருக்கு மீண்டும் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, இவரின் இதயத்தில் இருந்த அடைப்பை நீக்குவதற்காக இரண்டு ஸ்டண்ட்கள் பொருத்தப்பட்டது.

இந்நிலையில் அறுவை சிகிச்சைக்கு பின் கங்குலியின் உடல் நிலை சீராக இருந்தாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில் இன்று காலை கங்குலி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து மருத்துவமனையின் சீனியர் மருத்துவர் ஒருவர் கூறுகையில், “மிஸ்டர் கங்குலி தற்போது நலமாக உள்ளார். அவரின் இருதயம் நார்மலாக உள்ள நபரின் இருதயம் போல உள்ளது. அவரின் உடல் நிலை சிறப்பான முன்னேற்றம் அடைந்து வருகிறது. இன்னும் ஓரிரு தினங்களில் அவர் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவார் என எதிர்பார்க்கிறோம்” என்றார்.

Views: - 0

0

0