சவுரவ் கங்குலிக்கு புதிதாக ஆஞ்சியோபிளாஸ்டி: மேலும் இரு ஸ்டண்ட் பொருத்தம்!
28 January 2021, 8:25 pmபிசிசிஐ தலைவரான சவுரவ் கங்குலிக்கு மீண்டும் ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டு இரண்டு ஸ்டண்ட்கள் பொருத்தப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலிக்கு சமீபத்தில் மாரடைப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கங்குலிக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து ஐந்து நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற பின்னர் வீட்டுக்கு திரும்பினார்.
இவரின் உடல் நிலையை தொடர்ந்து மருத்துவர்கள் ஆராய்ந்து, அடுத்த கட்ட சிகிச்சை மேற்கொள்ள இருந்த நிலையில், நேற்று திடீரென மீண்டும் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவரின் உடல் நிலையை ஆய்வு செய்த மருத்துவர்கள் இவருக்கு இன்று ஸ்டென்ட் சிகிச்சை மேற்கொள்ளப்படும் என ஏற்கனவே அறிக்கை மூலம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இவருக்கு இன்று மீண்டும் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, இவரின் இதயத்தில் இருந்த அடைப்பை நீக்குவதற்காக இரண்டு ஸ்டண்ட்கள் பொருத்தப்பட்டது. ஏற்கனவே இவருக்கு முதல் முறை சிகிச்சை அளிக்கப்பட்ட போது ஒரு ஸ்டாண்ட் பொருத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் இவருக்கு இரண்டாவது கட்டமாக மேலும் இரண்டு ஸ்டண்ட்கள் பொருத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மருத்துவமனை அதிகாரி ஒருவர் கூறுகையில், “கங்குலிக்கு ஏற்பட்ட அடைப்பை நீக்குவதற்காக அவரது காரோனரி ஆட்டரிகளில் இரண்டு ஸ்டண்ட்கள் பொருத்தப்பட்டுள்ளது. தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது” என்றார்.
இதற்கிடையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி, கங்குலியை சந்தித்தபின் செய்தியாளர்களிடம் கூறுகையில்,“சவுரவ் எழுந்து அமர்ந்து பேசினார். அவருக்கு ஆப்ரேஷன் வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. அவரின் மனைவி டோனாவிடம் இதுதொடர்பாக பேசினேன்” என்றார்.
0
0