இந்திய டீமின் இந்த முடிவு முட்டாள் தனமானது: விளாசிய ஹர்பஜன் சிங்!
6 February 2021, 8:22 pmகுல்தீப்பை வெளியில் அமர வைத்த இந்திய அணியின் முடிவு தவறானது என இந்தியச் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி முதலில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் நடக்கிறது. இதில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் இரட்டை சதம் விளாச, அந்த அணி வலுவான நிலையில் உள்ளது. இதற்கிடையில் குல்தீப் யாதவை வெளியில் அமர வைத்த இந்திய கிரிக்கெட் அணியின் முடிவு சரியானது அல்ல என இந்தியச் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடக்கும் முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்பாக இந்திய கிரிக்கெட் அணியில் அக்சர் பட்டேல் சேர்க்கப்படுவதாக இருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் காயம் காரணமாக அக்சர் முதல் போட்டியில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் சைனா மேன் சுழற்பந்துவீச்சாளரான குல்தீப் யாதவ் இந்திய அணியில் சேர்க்கப்படுவார் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அவருக்குப் பதிலாக சபாஷ் நதீம் அணியில் இடம் பிடித்தார். சென்னை ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமானது எனத் தெரிந்தும் குறிப்பிட்ட சுழற் கூட்டணியை களமிறக்காமல் இந்திய அணி தவறு செய்துவிட்டதாக ஹர்பஜன்சிங் விமர்சனம் செய்துள்ளார்.
இதுகுறித்து ஹர்பஜன் சிங் கூறுகையில், “ குல்தீப் யாதவிற்கு விளையாடும் லெவனில் வாய்ப்பு கிடைக்காமல் போனது, எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. இடது கை சுழற்பந்து வீச்சாளரான அக்சர் பட்டேல் காயமடைந்ததால் அவருக்கு இணையாக அவரைப்போலப் பந்துவீசும் மாற்று வீரராக நதீம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.
ஆனால் என்னைப் பொறுத்தவரைச் சென்னையில் இரண்டு ஆஃப் ஸ்பின்னர்களை கொண்டு களம் இறங்குவது புத்திசாலித்தனமாகத் தெரியவில்லை. குல்தீப் யாதவ் இந்திய அணியில் இடம் பிடித்து இருந்தால் இந்திய பந்துவீச்சில் சிறந்த மாற்றங்கள் இருந்திருக்கும். மேலும் குல்தீப் கடைசியாகப் பங்கேற்ற 2 டெஸ்ட் போட்டிகளிலும், 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதனால் அவரை அணியில் சேர்க்காது சரியான முடிவு அல்ல என நினைக்கிறேன்” என்றார்.
ஹர்பஜன் சிங் கருத்து போலவே முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகனும் இந்திய அணியில் குல்தீப் யாதவ் சேர்க்கப்படாததைக் கடுமையாக விமர்சித்திருந்தார்.
0
0