ஏன் மனுஷங்க இவ்வளவு மோசமாக இருக்குறாங்கன்னு தெரியல: மெஸ்சி விஷயத்தில் சிராஜ் கருத்து!

5 February 2021, 10:42 pm
Quick Share

பார்சிலோனா நட்சத்திர கால்பந்து வீரரான மெஸ்சியின் ஒப்பந்தம் குறித்து தகவலை வெளியிட்டது கொஞ்சமும் முறையான செயல் அல்ல என அத்லெடிகோ மாட்ரிட் வீரர் லூயிஸ் சிராஜ் தெரிவித்துள்ளார்.

கடந்த 2017 -2021 ஆண்டில் பார்சிலோனா அணியின் நட்சத்திர கால்பந்து வீரரான லயோனல் மெஸ்சி, அந்த அணியுடனான ஒப்பந்தம் மூலம் பல ஆயிரம் கோடிகளை சம்பாதித்துள்ளதாக ஸ்பெயின் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டது. பார்சிலோனா அணியின் கேப்டனான லயோனல் மெஸ்சி. சர்வதேச அரங்கில் சிறந்த கால்பந்து வீரராக திகழ்ந்து வருகிறார். இவர், கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் பார்சிலோனா உடனான ஒப்பந்தம், சம்பலம் மற்றும் ஒப்பந்த புதுப்பித்தல் என பல கோடிகளை வருமானமாக ஈட்டியுள்ளார் என ஸ்பெயின் செய்தித்தாளான எல் முண்டோ அம்பலப்படுத்தியுள்ளது. இவரின் இந்த வருமானம் விளையாட்டு வீரர் ஒருவர் ஈட்டிய வரலாறு காணதாக தொகை என்றும் அதில் குறிப்பிட்டுள்ளது.

அந்த செய்தியில் குறிப்பிட்டது போல பார்சிலோனா அணிக்காக கடந்த 5 சீசன்களில் பங்கேற்க மெஸ்சி மொத்தமாக 55.5237 கோடி யூரோக்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்திய ரூபாய் மதிப்பில் இந்த தொகை கிட்டத்தட்ட ரூ. 4920 கோடிகளாகும். பார்சிலோனா அணியுடனான மெஸ்சியின் ஒப்பந்தம் இன்னும் ஐந்து மாதங்கள் உள்ளது. இதுவரை மெஸ்சி 51.1540 கோடி யூரோக்களை பெற்றுள்ளார்.

இந்நிலையில் இந்த செய்தியை வெளியிட்ட பத்திரிக்கைக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பார்சிலோனா அணி நிர்வாகம் சார்பில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை தங்களின் நிர்வாகத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் வெளியிடவில்லை என பார்சிலோனா அணி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மெஸ்சியின் ரகசியமான ஒப்பந்தம் குறித்து தகவலை வெளியிட்டது கொஞ்சமும் முறையான செயல் அல்ல என அத்லெடிகோ மாட்ரிட் வீரர் லூயிஸ் சிராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சிராஜ் கூறுகையில்,“ரகசியமான தகவல்களை இப்படி வெட்ட வெளிச்சம் போட்டு ஏன் மனிதர்கள் இவ்வளவு மோசமாக நடந்து கொள்கிறார்கள் என எனக்கு புரியவில்லை. குறிப்பாக கிளப்பிற்காக மெஸ்சி போன்ற ஒரு சிறந்த வீரர் அனைத்தையும் செய்திருக்கிறார். அவரைப் போல மற்ற எந்த ஒரு வீரரும் எந்த ஒரு கிளப்பிற்காகவும் இதுவரை செய்ததை நான் பார்த்தது கிடையாது” என்றார்.

Views: - 0

0

0