ஐசிசி தரவரிசை: வாழ்நாள் சிறந்த இடம் பிடித்த ரோஹித் சர்மா, அஸ்வின் முன்னேற்றம்!

28 February 2021, 6:56 pm
Quick Share

ஐசிசி சிறந்த டெஸ்ட் வீரர்கள் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரரான ரோகித் சர்மா 8வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதேபோல இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் பவுலர்கள் பட்டியலில்
முன்னேற்றம் அடைந்துள்ளார்.

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதிய மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் சிறந்து விளங்கும் பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் இந்திய அணியின் துவக்க வீரர் ரோஹித் சர்மா, தனது வாழ்நாள் சிறந்த இடமான 8வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு தனது வாழ்நாள் சிறந்த இடமாக 10வது இடத்திற்கு முன்னேறிய ரோகித் சர்மா தற்போது 8வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதேபோல டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் 400 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சிறந்த பவுலர்களுக்கான பட்டியலில் டாப்-3 இடத்திற்குள் நுழைந்தார்.

அஸ்வின் பவுலர்களுக்கான பட்டியலில் நான்கு இடம் முன்னேறி மூன்றாவது இடம் பிடித்துள்ளார். முதல் இடத்தில் ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ் உள்ளார். இரண்டாவது இடத்தில் உள்ள நியூசிலாந்து அணியின் நீல் வாக்னர் உள்ளார். பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி தனது ஐந்தாவது இடத்தை தக்க வைத்துக்கொண்டார். மற்றொரு இந்திய வீரரான புஜாரா இரண்டு இடங்கள் பின் தங்கி 10வது இடத்திற்குத் தள்ளப்பட்டார்.

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆறாவது இடத்திற்குத் தள்ளப்பட்டார். மேலும் மற்றொரு இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளரான ஸ்டுவர்ட் பிராட் ஒரு இடம் சறுக்கி 7வது இடம் பிடித்தார். இதேபோல இந்திய வேகப்பந்துவீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ராவும் 1 இடம் பின் தங்கி 9வது இடத்திற்குத் தள்ளப்பட்டார்.

Views: - 540

0

0