ஐசிசி டெஸ்ட் ரேங்கிங்: காபா ஹீரோயிஷம்… உச்சத்தை எட்டிய ரிஷப் பண்ட்!

20 January 2021, 3:24 pm
pant - updatenews360
Quick Share

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் அசத்திய இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் சர்வதேச ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் 13வது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார்.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 4-வது டெஸ்ட் போட்டி காபா மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் இந்திய கிரிக்கெட் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் அசத்தலான ஆட்டம் மூலம் இந்திய அணி வெற்றிகரமாக 328 ரன்களை எட்ட கைகொடுத்தார். அதேபோல இந்திய அணி தொடரை 2 – 1 எனக் கைப்பற்றவும் காரணமாக அமைந்தார்.

இந்நிலையில் ஐசிசி வெளியிட்டுள்ள தரவரிசை பட்டியலில் 13வது இடத்துக்கு முன்னேறி அசத்தியுள்ளார் பண்ட். இதன் மூலம் தற்போது சர்வதேச தர வரிசை பட்டியலில் முன்னிலையில் உள்ள விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இவரைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவின் விக்கெட் கீப்பரான குயின்டன் டி காக் 15 வது இடத்தில் உள்ளார். இதேபோல காபா மைதானத்தில் சதமடித்து அசத்திய ஆஸ்திரேலிய வீரர் லபுஷேன் மூன்றாவது இடத்துக்கு முன்னேறினார்.

இதன்மூலம் இவர் இந்திய கேப்டன் விராட் கோலியை பின்னுக்குத் தள்ளினார். கோலி தனது முதல் குழந்தையின் வருகைக்காக கடைசி 3 டெஸ்டில் பங்கேற்க வில்லை. இதனால் தரவரிசை பட்டியலில் கோலி சரிவைச் சந்தித்துள்ளார். முதலிடத்தில் நியூஸிலாந்தின் கேன் வில்லியம்சன், இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் உள்ளனர். இதேபோல இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய துவக்க வீரர் சுப்மான் கில் 68-வது இடத்தில் இருந்து 47 வது இடத்துக்கு முன்னேறினார்.

மேலும் மற்றொரு இந்திய வீரர் புஜாரா ஏழாவது இடம் பிடித்து அசத்தினார். அஸ்வின் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இல்லாத இந்திய அணியை நான்காவது டெஸ்டில் முன்னின்று வழி நடத்திய முகமது சிராஜ், 32 இடங்கள் முன்னேறி 45 வது இடம் பிடித்தார். இந்திய அணியில் அறிமுக வாய்ப்பு பெற்ற வாஷிங்டன் சுந்தர் மற்றும் சார்துல் தாகூரும் இப்பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளனர். சுந்தர் பேட்ஸ்மேன்கள் பட்டியலில் 82 வது இடமும் பவுலர்களுக்கான பட்டியலில் 97 வது இடத்தில் இடங்களில் உள்ளார். தாகூர் பேட்டிங்கில் 113வது இடத்திலும் பவுலிங்கில் 65வது இடத்தில் உள்ளார்.

Views: - 11

0

0