‘அம்பயர்ஸ் கால்’ முறையை ஐசிசி மறுபரிசீலனை செய்யணும் : சச்சின்!
28 December 2020, 5:25 pmஐசிசி அம்பயர்ஸ் கால் விதியை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என இந்திய ஜாம்பவான் சச்சின் தெரிவித்துள்ளார்.
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி மெல்ப்லோர்னில் நடக்கிறது. இதில் இந்திய அணியின் கையே ஓங்கியுள்ளது. இந்நிலையில் இன்றைய நாள் ஆட்டத்தின் போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஜோ பர்ன்ஸ் மற்றும் மார்னஸ் லபுஷேன் ஆகியோர் எல்பிடபிள்யு முறையில் அதிர்ஷ்டவசமாகத் தப்பினர்.
இதைப்பார்த்த இந்திய ஜாம்பவான் சச்சின். டிஆர்எஸ் முறையை ஐசிசி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சச்சின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,“வீரர்கள் ரிவியூ முறையைப் பயன்படுத்துவதற்கு காரணம் அவர்கள் களத்தில் இருக்கும் அம்பயரின் முடிவில் திருப்தி இல்லாதது தான். அம்பயர்ஸ் கால் மீது டிஆர்எஸ் முறையை ஐசிசி மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என அதில் குறிப்பிட்டுள்ளார்.
ரிவியூ முறை பெரும்பாலும் எல்பிடபிள்யு முறையில் பேட்ஸ்மேன்கள் அவுட்டாகும் போது கேட்கப்படுகிறது. அந்த சூழலில் ரிவியூ முறையில் அம்பர்ஸ் கால் என வரும் பொழுது, களத்தில் நிற்கும் அம்பயர் நாட்- அவுட் கொடுத்திருந்தால். அந்த முடிவை டிவி அம்பயரால் மாற்ற இயலாது. அதனால் மீண்டும் பேட்ஸ்மேன் தொடரும் நிலையே தற்போது உள்ளது.
இதை மாற்ற வேண்டும் என்பதே பலரின் கருத்தாகவுள்ளது. இந்த விதி அனில் கும்ளேவின் தலைமையிலான ஐசிசி கமிட்டி உருவாக்கியதாகும். இந்த விதிக்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்தவர் முன்னாள் ஆஸ்திரேலிய சுழல் ஜாம்பவான் ஷேன் வார்ன். இவர் இந்த விதி குறித்துக் கூறுகையில்,“பந்து ஸ்டெம்ப்பில் படும்பட்சத்தில் அது ஒரே நேரத்தில் அவுட் மற்றும் நாட் அவுட்டாக இருக்க முடியாது” என்றார்.
0
0