என்னப்பா.. இப்படி பண்ணீட்டியே : கேப்டன் பாண்டியா சொன்ன அந்த வார்த்தை… அர்ஷ்தீப் சிங்கை விளாசும் நெட்டிசன்கள்..!!

Author: Babu Lakshmanan
6 January 2023, 9:43 am
Quick Share

இந்திய அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியை வென்ற இலங்கை அணி, அந்தப் போட்டியில் 200 ரன்களை கடக்க இந்திய அணியின் அர்ஷ்தீப் சிங் காரணமாக இருந்ததாக நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த இலங்கை அணி, நேற்று 2வது டி20 போட்டியில் மோதியது. புனேவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதில் முதல் போட்டியில் இடம்பெறாத அர்ஷ்தீப் சிங், இந்த போட்டியில் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டார். டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக முக்கிய விக்கெட்டுகளை எடுத்து அசத்திய அவர், கடைசி கட்ட ஓவர்களையும் அற்புதமாக வீசும் திறம் பெற்று வந்தார். இதனால் இந்திய டி20 அணிக்கு முக்கிய பந்துவீச்சாளராக திகழ்வார் என அனைவராலும் பேசப்பட்டு வந்தார்.

ஆனால், இலங்கைக்கு எதிரான நேற்றைய போட்டியில் இரண்டாவது ஓவரை வீச வந்த அவர், ஒரே ஓவரில் 3 நோ பால்களை வீசினார். அத்துடன் அந்த ஓவரில் மட்டும் 19 ரன்களை வழங்கினார். இதனால், அவர் மீதான நம்பிக்கையை பாண்டியாவில் இல்லாமல் போனது.
இறுதியில் 19வது ஓவரை வீச வந்த அர்ஷ்தீப் சிங், அந்த ஓவரிலும், 2 நோ பால்களை வீசினார்.

அதில், அதிரடியாக ஆடிய இலங்கை அணியின் கேப்டன் ஷனாகா விக்கெட் எடுக்கப்பட்ட பந்தும் நோபாலாக மாறியது ஆட்டத்தின் போக்கை மாற்றியது. ப்ரீ ஹிட் பந்தை அவர் சிக்சருக்கு பறக்கவிட்டு இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். கடைசி வரை ஆட்டமிழக்காத அவர், 20 பந்துகளுக்கு அரைசதம் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்த காரணமாக அமைந்தார்.

இந்த ஓவரிலும் அர்ஷ்தீப் சிங் 18 ரன்களை வாரி வழங்கியதன் மூலம், இரண்டே ஓவர்களை வீசி 5 நோ பால்களுடன் 37 ரன்களை எதிரணிக்கு வாரி வழங்கியுள்ளார். இதன்மூலம், இலங்கை அணி 200 ரன்களை கடந்து, இந்திய அணிக்கு கடினமான இலக்கை நிர்ணயிக்க அர்ஷ்தீப் சிங் காரணமாகினார். இதனால், அவரை பல்வேறு தரப்பினர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஹர்திக் பாண்டியா, “அர்ஷ்தீப் சிங்கை குறை சொல்ல முடியாது. ஆனால், நோ பால் வீசுவது குற்றமாகும்,” எனக் கூறினார்.

Views: - 404

0

0