நியூசி.,க்கு 284 ரன்கள் இலக்காக நிர்ணயம்… முதல் விக்கெட்டை தட்டி தூக்கிய அஸ்வின் : த்ரில்லிங்கில் கான்பூர் டெஸ்ட்!!

Author: Babu Lakshmanan
28 November 2021, 4:55 pm
Quick Share

கான்பூர் டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணிக்கு 284 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது இந்தியா.

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கான்பூரில் கடந்த 24ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி 345 ரன்களை சேர்த்தது. இதைத் தொடர்ந்து, விளையாடி நியூசிலாந்து அணி 296 ரன்கள் எடுத்தது. இதன்மூலம், 49 ரன்கள் முன்னிலையில் 2வது இன்னிங்சை ஆடிய இந்தியா, 4வது நாளான இன்று பேட் செய்தது.

சீரான இடைவெளியில் விக்கெட்டுக்களை இழந்தாலும், 8வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அக்ஷர் படேல், சஹா இணை சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தது. இந்த இணையை பிரிக்க முடியாமல் நியூசிலாந்து அணி பவுலர்கள் திணறினர்.

இறுதியில் 7 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இந்திய அணி டிக்ளேர் செய்தது. விருதிமான சஹா (61), அக்ஷர் படேல் (28) அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர். அதிகபட்சமாக, ஸ்ரேயாஷ் ஐயர் 65 ரன்கள் எடுத்தார். இதன்மூலம், 284 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.

இதைத் தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து அணி 3 ரன்கள் எடுத்திருந்த போது யங்-கின் விக்கெட்டை அஸ்வின் எடுத்தார். 4வது நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 4 ரன்கள் எடுத்திருந்தது.

நாளை கடைசி நாள் உள்ள நிலையில் இரு அணிகளுக்கும் வெற்றி வாய்ப்பு இருப்பதால், யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Views: - 903

0

0