இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் அடுத்த கேப்டன் யார்…? கோலியின் இடத்திற்கு போட்டி போடும் 5 முக்கிய வீரர்கள்..!!!

Author: Babu Lakshmanan
18 January 2022, 7:16 pm
Quick Share

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவிக்கு 5 வீரர்களிடையே போட்டி நிலவி வருகிறது.

டி20 உலகக்கோப்பை தொடருக்கு பிறகு டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி விலகினார். கேப்டன் விவகாரத்தில் கோலிக்கும், பிசிசிஐக்கும் முரண்பாடான கருத்துக்களே நிலவி வந்தன. இதைத் தொடர்ந்து, டெஸ்ட் அணிக்கு மட்டும் அவர் கேப்டனாக செயல்பட்டு வந்தார். வெறும் டெஸ்ட் அணிக்கு மட்டும் கேப்டனாக கோலி பங்கேற்ற முதல் தொடராக தென்னாப்ரிக்க தொடர் இருந்தது. 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை கோலி தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியது.

இதைத் தொடர்ந்து, 2வது போட்டியில் கோலி காயம் காரணமாக விளையாடவில்லை. அதில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. பின்னர், மீண்டும் வந்த கோலி 3வது போட்டியிலும் தோல்வியை தழுவினார். இதனால், 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை இழந்தது. ஏற்கனவே, கடும் விமர்சனங்களை சந்தித்து வந்த கோலிக்கு இந்தத் தோல்வி மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியது.

இந்த சூழலில், டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகுவதாக விராட் கோலி அறிவித்தார். இதையடுத்து, கோலியின் இடத்தை அடுத்து யார் நிரப்பப் போகிறார்கள் என்பது புரியாத புதிராக இருந்து வருகிறது. டெஸ்ட்டில் வேறு எந்த கேப்டனும் செய்திடாத சாதனைகளை படைத்த கோலியின் இடத்திற்கு வேறு ஒருவரை நியமிப்பது பிசிசிஐக்கு அவ்வளவு எளிதான விஷயமல்ல.

இருப்பினும், இந்திய அணி விளையாடவிருக்கும் அடுத்த டெஸ்ட் போட்டிக்கான கேப்டனை நியமிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதில், 5 முக்கிய வீரர்கள் பிசிசிஐயின் பரிசீலனையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் ஒருநாள் மற்றும் டி20 கேப்டனான ரோகித் சர்மாவே, டெஸ்ட் அணிக்கும் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. ஆனால், 3 வடிவிலான கிரிக்கெட் தொடருக்கும் ரோகித் சர்மாவை கேப்டனாக நியமித்தால், கோலியைப் போன்றே அவருக்கும் பணிச்சுமை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதுமட்டுமல்லாமல், வரும் ஏப்ரல் மாதம் வந்தால், ரோகித்துக்கு 35 வயதாகிறது. இதனால், அவர் அதிகபட்சமாக, இன்னும் 4 முதல் 5 ஆண்டுகள் மட்டுமே விளையாட வாய்ப்பு உள்ளது. எனவே, அணியை நீண்ட காலம் வழிநடத்தக் கூடிய கேப்டன்தான் தீர்வு என்றால், மாற்று வீரரைத்தான் பிசிசிஐ ஆலோசிக்க வேண்டும்.

இளம் கேப்டன்களாக கேஎல் ராகுல், ரிஷப் பண்ட் ஆகியோர் இருக்கின்றனர். அவர்கள் இருவருக்கும் ஐபிஎல்லில் கேப்டனாக செயல்பட்ட அனுபவமுண்டு. அதிலும் கேஎல் ராகுலுக்கு இந்திய அணியின் கேப்டன் மற்றும் துணைகேப்டனாக இருந்தது கூடுதல் அம்சமாகும்.

kl rahul - updatenews360

இவரை கேப்டனாக நியமித்தால், சில போட்டிகள் விளையாட விளையாட, வெற்றி கைக்கூடும் என்று நம்பலாம். அதேபோல, வெறும் 24 வயதான ரிஷப் பண்ட்டின் பேட்டிங் பற்றி அனைவருக்கும் தெரிந்ததே. 2007ல் தோனியை கேப்டனாக நியமனம் செய்த போது வைத்த அதே நம்பிக்கையை, பண்ட் மீது பிசிசிஐ வைத்தால், மிகச்சரியானதாக இருக்கும் என்று கூறுகின்றனர் கிரிக்கெட் வல்லுநர்கள்.

டெஸ்ட்டில் அனுபவமிக்க வீரராக இருக்கும் அஸ்வின் 10 ஆண்டுகளுக்கு மேலாக அணியில் தவிர்க்க முடியாத வீரராக இருந்து வருகிறார். இவரும் ஐபிஎல்லில் கேப்டனாக இருந்தவர்தான். இவரையும் பிசிசிஐ யோசிக்கலாம்.

தற்போது, பந்து வீச்சாளர்களை கேப்டனாக நியமிக்கும் கலாச்சாரம்தான் அதிகரித்து வருகிறது அந்த வகையில், பும்ரா கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே, இந்திய டெஸ்ட் அணிக்கு துணைக்கேப்டனாகவும் இருந்துள்ளார்.

யார் கேப்டனாக நியமிக்கப்பட போகிறார்கள் என்பது பிசிசிஐயின் கையில்தான் உள்ளது.

Views: - 831

0

0