தொடரை இந்தியா தான் வெல்லும்… ஆனா இவங்க இரண்டும் பேரும் பெரும் தலைவலி கொடுப்பாங்க: முன்னாள் இங்கிலாந்து வீரர் கணிப்பு!

28 January 2021, 8:58 pm
Quick Share

இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இந்திய அணி வெல்லும் என முன்னாள் இங்கிலாந்து வீரர் மாண்டி பனேசர் கணித்துள்ளார். ஆனால் இங்கிலாந்து அணிக்கு கேப்டன் ஜோ ரூட் மற்றும் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் நிச்சயமாகத் தலைவலியை ஏற்படுத்துவார்கள் என்றும் அவர் கணித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணில் 2- 1 என டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்று, தற்போது இந்திய அணி அடுத்ததாக இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. இதன் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் தமிழகத்தின் சென்னை மைதானத்தில் நடக்க உள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி வெற்றி பெற்று, லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் போட்டியில் பங்கேற்கும் என இந்திய அணியின் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

ஆனால் இலங்கை அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி முழுமையாகக் கைப்பற்றியது. இந்த உற்சாகத்தில் இந்திய அணியை இங்கிலாந்து அணி எதிர்கொள்ள உள்ளது. இதனால் இந்த கிரிக்கெட் தொடருக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் சென்னை மைதானத்தில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் கடைசியாகக் கடந்த 2016 இல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்றது.

அப்போது அலஸ்டேர் குக் தலைமையிலான இங்கிலாந்து அணியை இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 78 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்நிலையில் இந்திய மண்ணில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் இதுவரை சுமார் 60 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று உள்ளது. அதில் இந்திய அணி அதிகபட்சமாக 19 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து அணி 13 டெஸ்ட் போட்டியில் வென்று உள்ளது. 28 டெஸ்ட் போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன.

அதேபோல சென்னை மைதானத்தில் இந்தியா இங்கிலாந்து அணிகள் 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் இந்திய அணி 5 முறையும், இங்கிலாந்து அணி 3 முறையும் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 1982 இல் நடந்த டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இந்நிலையில் கடந்த 2012- 13 ஆண்டில் நடந்த டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி இந்திய அணியை வீழ்த்தி 2 -1 என டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி அசத்தியது. இந்த டெஸ்ட் தொடரை வென்ற இங்கிலாந்து அணியில் இடம் பெற்ற முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான மாண்டி பனேசர், இந்த டெஸ்ட் தொடர் குறித்து கணித்துள்ளார்.

இதுகுறித்து பனேசர் கூறுகையில், “நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை வெல்ல இந்திய அணிக்குத் தான் அதிக வாய்ப்பு உள்ளது. ஆனால் இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிராக 4 -0 என வெல்ல முடியாது. அப்படி வெற்றி பெற்றால் மட்டும் தான் எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும். என்னைப் பொறுத்தவரை இந்திய அணி 2 – 1 அல்லது 2 – 0 என டெஸ்ட் தொடரைக் கைப்பற்ற வாய்ப்பு உள்ளது.

ஆனால் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட்டின் அசைக்க முடியாத ஆட்டம் இலங்கைக்கு எதிராகத் தெளிவாகத் தெரிந்தது. அதேபோல ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் விரைவாக ரன்கள் சேர்க்கும் திறமை கொண்டவர். இவர்கள் இருவரும் நிச்சயமாக இந்திய அணிக்கு மிகப்பெரிய தலைவலியாக இருப்பார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இரண்டு அணிகளிலும் முக்கியமான வீரர்கள் இருப்பதால் சம பலமாக உள்ளது. இதனால் எந்த நேரத்திலும் போட்டியை மாற்றும் திறமை கொண்ட வீரர்கள் இரு அணிகளிலும் உள்ளனர். ஆனால் சொந்த மண் என்ற அடிப்படையில் இந்திய அணிக்கு டெஸ்ட் தொடரைக் கைப்பற்ற இங்கிலாந்தை விட அதிக வாய்ப்பு உள்ளது” என்றார்.

Views: - 0

0

0