சரித்திரம் படைத்த இந்திய மகளிர் ஹாக்கி அணி : ஒலிம்பிக்கில் முதல்முறையாக அரையிறுதிக்கு முன்னேற்றம்…!!!

Author: Babu Lakshmanan
2 August 2021, 10:58 am
womens hockey - updatenews360
Quick Share

ஒலிம்பிக் போட்டியில் மகளிருக்கான ஹாக்கியில் இந்திய அணி முதல்முறையாக அரையிறுதிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் மகளிருக்கான ஹாக்கி போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்திய அணி தனது முதல் மூன்று போட்டிகளில் நெதர்லாந்து, ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய அணிகளிடம் தோல்வியை தழுவியது.

ஒரு வெற்றி கூட பெறாத நிலையில், இந்திய மகளிர் அணி, கடந்த போட்டியில் அயர்லாந்தை தோற்கடித்து முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. ஒவ்வொரு குரூப்பிலும் 6 அணிகள் இடம்பிடித்துள்ள நிலையில், முதல் 4 அணிகள் காலிறுதிக்கு தகுதி பெறும். குரூப் ஏ-வில் அயர்லாந்து 4வது இடத்திலும், இந்திய அணி 5வது இடத்திலும் இருந்தது.

இந்த சூழலில், இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது. இதன் மூலம் 2 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்திற்கு இந்தியா முன்னேறியிருந்தது. இருப்பினும், பிரிட்டன் – அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியின் முடிவை பொறுத்தே, காலிறுதிக்கான வாய்ப்பு இந்திய அணிக்கு கிடைக்கும் என்றிருந்தது. அதன்படி, பிரிட்டனுக்கு எதிரான போட்டியில் அயர்லாந்து அணி தோல்வியை தழுவிய நிலையில், இந்திய மகளிர் அணி 4வது அணியாக காலிறுதிக்கு தகுதி பெற்றது.

அதிர்ஷ்டத்தின் மூலம் காலிறுதிக்கு முன்னேறிய இந்தய அணி, ஆஸ்திரேலியாவை இன்று எதிர்த்து விளையாடியது. பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி, ஒலிம்பிக் வரலாற்றில் முதல்முறையாக அரையிறுதிக்கு தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது.

இந்தப் போட்டியில், ஆஸ்திரேலியாவுக்கு கிடைத்த 9 கார்னர் வாய்ப்புகளில் ஒன்றை கூட கோலாக மாற விடாமல் இந்தியா அணி அபாரமாக செயல்பட்டுள்ளது. அதேபோல, தங்களுக்கு கிடைத்த ஒரு கார்னர் வாய்ப்பையும் கோலாக மாற்றி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. நாளை நடக்கும் அரையிறுதிப் போட்டியில் அர்ஜெண்டினாவை எதிர்த்து விளையாட இருக்கிறது.

முன்னதாக, 41 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய ஆடவர் ஹாக்கி அணி ஒலிம்பிக் அரையிறுதிக்கு முன்னேறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 484

2

0