கோலி கேப்டன் பதவியில் இருந்து விலக ஷிகர் தவானும், தோனியும் காரணமா..? வெளியான பரபரப்பு தகவல்..!!

Author: Babu Lakshmanan
17 September 2021, 12:52 pm
kohli - dhoni - dhawan - updatenesws360
Quick Share

இந்திய கிரிக்கெட் அணியின் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டி என 3 வடிவ ஆட்டங்களுக்கும் கேப்டனாக விராட் கோலி, கடந்த 5 முதல் 6 வருடங்களாக செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில், டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பிறகு, டி20 அணிக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக விராட் கோலி நேற்று அறிவித்தார். இவரது தலைமையில் இந்திய அணி பல்வேறு அணிகளுக்கு எதிரான தொடர்களை கைப்பற்றி அசத்தியிருந்தாலும் கூட, ஐசிசி கோப்பைகளை இதுவரைக்கும் பெற்றுக் கொடுத்ததில்லை. எனவே, இவரது முடிவு சரியானது என்று சிலர் கூறி வருகின்றனர்.

அதேவேளையில், கோலியின் இந்த முடிவை ரசிகர்களினால் ஏற்றுக் கொள்ள முடியாததாக இருந்து வருகிறது. காரணம், 3 ஃபார்மெட்களிலும் 50க்கும் கூடுதலான சராசரியைக் கொண்டுள்ள ஒரே பேட்ஸ்மேன் விராட் கோலிதான். எனவே, கேப்டன் பதவி கோலிக்கு பெரிய நெருக்கடியை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை என்பதையே காட்டுவதாக அவர்கள் கூறுகின்றனர்.

ஆனால், கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலக வேறு சில காரணங்கள் சொல்லப்படுகிறது. அதாவது, இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான அணியில் ஷிகர் தவானை சேர்க்குமாறு விராட் கோலி கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால், தேர்வு குழுவினர் அதற்கு மறுப்பு தெரிவித்ததுடன், விஜய் ஹசாரே போட்டியில் சிறப்பாக விளையாடிய வேறு ஒரு வீரருக்கு வாய்ப்பு வழங்கியதாகக் கூறப்படுகிறது. ஆனால், கோலி தனது முடிவில் பிடிவாதமாக இருந்து, தவானை மீண்டும் மீண்டும் பரிந்துரைத்ததாக தெரிகிறது. கோலியின் பிடிவாதத்தை தொடர்ந்து, டி20 அணியிலும் கூட தவான் சேர்க்கப்படவில்லை.

இதுபோக புதிய அணித்தேர்வுக்குழு, ரவி சாஸ்திரிக்கு பிறகு வருகை தரும் புதிய பயிற்சியாளர் ஆகியவை கூட கோலிக்கு கடும் சவாலை உருவாக்கியுள்ளது. மேலும் தோனியின் மெண்ட்டார் ரோல் டி20 உலகக்கோப்பையையும் தாண்டி நீடித்தால் அணித்தேர்வு விவகாரம் உள்ளிட்டவற்றில் தோனி தலையிடுவார் போன்ற காரணங்களும் கூறப்படுகின்றன. எனவே, இந்த காரணங்களினால் தான் கோலி டி20 கேப்டன்சியை உதறியதாகத் தெரிகிறது.

உண்மையான காரணம் என்ன என்பதை, கோலியின் நெருங்கிய வட்டாரத்தில் இருக்கும் யாரெனும் சொன்னால்தான், எது நிஜம் என்பது தெரிய வரும்.

Views: - 440

0

0