தனியொரு ஆளாக போராடிய மிதாலி ராஜ்… சொதப்பிய சக வீராங்கனைகள்.. தொடரை இழந்தது இந்திய அணி…!!

Author: Babu Lakshmanan
1 July 2021, 11:23 am
india women - updatenews360
Quick Share

இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தோல்வியடைந்த நிலையில், சில மாற்றங்களுடன் 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி நேற்று இரவு விளையாடியது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, களமிறங்கிய இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா (22), சஃபாலி வர்மா (44) ஆகியோர் சுமாரான தொடக்கம் கொடுத்தனர். பின்னர் வந்த கேப்டன் மிதாலி ராஜ் (59) அரைசதம் விளாசி ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து, வந்த வீராங்கனைகள் சொற்ப ரன்களில் வெளியேறினர். இதனால், நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 221 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணி தரப்பில் கேட் கிராஸ் 5 விக்கெட்டும், எக்கில்ஸ்டோன் 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.

222 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுக்களை இழந்தது. 133 ரன்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. ஆனால், டன்க்ளி (73), ப்ரன்ட் (33) ஆகியோர் ஜோடி சேர்ந்து இந்திய அணியின் வெற்றியை தகர்த்தனர். இருவரும் சிறப்பாக ஆடி மேற்கொண்டு விக்கெட்டுக்கள் விளாமல் வெற்றி தேடிக் கொடுத்தனர்.

இதன்மூலம், 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி தொடரை வென்றது. இரு அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டி சனிக்கிழமை நடக்கிறது.

Views: - 570

0

0