இந்தியாவின் கனவு தவிடுபொடியானது : டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறுவதால் ரசிகர்கள் ஏமாற்றம்!!

Author: Udayachandran RadhaKrishnan
7 November 2021, 7:18 pm
India out- Updatenews360
Quick Share

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதி வாய்ப்பை இந்திய அணி இழந்துள்ளது ரசிகர்களை கவலையடைந்துள்ளனர்.

டி20 உலக கோப்பைக்கான போட்டிகள் கடந்த சிலநாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில்,குரூப் “பி”யை பொறுத்தவரை பாகிஸ்தான் அணி ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில், மீதமுள்ள ஒரு இடத்திற்கு இந்தியா, நியூசிலாந்து, ஆஃப்கானிஸ்தான் அணிகள் போட்டி போட்டு வருகின்றன.

இந்த நிலையில்,இன்று அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானத்தில் நியூசிலாந்து, ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றால் அரையிறுதிக்கு முன்னேறிவிடும். மாறாக ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றுவிட்டால் ரன் ரேட் அடிப்படையில் இந்தியா அல்லது ஆப்கானிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு செல்லும்.

போட்டிக்கு முன்னதாக டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது. நியூசிலாந்தின் பந்து வீச்சில் தடுமாறிய ஆப்கான் அணி, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனையடுத்து, களமிறங்கிய நியூசிலாந்து அணியின் அதிரடியான ஆட்டத்தால் 18.1 ஓவரிலேயே இரண்டு விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றுள்ளது. இதனால்,நான்கு வெற்றிகளை பதிவு செய்து 8 புள்ளிகளுடன் அரையிறுதிப் போட்டிக்கு நியூசிலாந்து அணி தகுதி பெற்றுள்ளது.

இப்போட்டியில்,ஆப்கானிஸ்தான் அணி வென்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பில் இந்திய அணி நீடிக்கும் என்று இருந்த நிலையில்,நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளதால் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதி வாய்ப்பை இந்திய அணி இழந்துள்ளது.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்டைப் பொறுத்தவரை, குரூப் 1 இல் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் குரூப் 2 இல் பாகிஸ்தான்,நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. அரையிறுதி வாய்ப்பை இந்திய அணி இழந்ததால் ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.

Views: - 841

0

0