பேட்ஸ்மேன்கள் சொதப்பல்… கேள்விக்குறியான பிளே ஆஃப்.. கொல்கத்தாவிடம் 2 ரன்களில் வெற்றியை பறிகொடுத்தது பஞ்சாப்..!!

By: Babu
10 October 2020, 7:50 pm
kxip - updatenews360
Quick Share

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பஞ்சாப் அணி பறிகொடுத்தது.

அபுதாபியில் உள்ள ஷேக் சையத் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய கொல்கத்தா வீரர்கள் தொடக்கத்தில் ரன்களை குவிக்க முடியாமல் திணறினர். ஒரு கட்டத்தில் முன்னணி விக்கெட்டுக்களை இழந்து தடுமாறிய போது, தொடக்க வீரர் கில்லுடன், கேப்டன் தினேஷ் கார்த்திக் இணைந்து அதிரடி காட்டினார்.

கில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், மறுமுனையில் தினேஷ் கார்த்திக் அதிரடி காட்டினார். கில் 57 ரன்களில் ஆட்டமிழந்ததை தொடர்ந்து, மோர்கன் 24 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். ஆட்டத்தின் கடைசி பந்து வரை விளையாடிய தினேஷ் கார்த்திக், 58 ரன்கள் விளாச, கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் சேர்த்தது.

இதைத் தொடர்ந்து, 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களான, கேஎல் ராகுல், மயாங்க் அகர்வால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் விக்கெட் இழப்பின்றி 100 ரன்களை கடந்தனர். இதனால், பஞ்சாப் அணி எளிதில் வெற்றி பெற்று விடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மயாங்க் அகர்வால் 56 ரன்னுக்கும், கேஎல் ராகுல் 74 ரன்னுக்கும் ஆட்டமிழந்த நிலையில், பஞ்சாப் அணியின் வெற்றிக்கு இறுதி ஓவரில் 14 ரன்கள் தேவைப்பட்டது.

சுனில் நரேன் வீசிய அந்த ஓவரில் மேக்ஸ்வெல் இரு பவுண்டரிகளை அடித்த நிலையிலும், அந்த அணியால் 11 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால், கொல்கத்தா அணி 2 ரன்களில் த்ரில் வெற்றி பெற்றது.

இதன்மூலம், 4வது வெற்றி பெற்ற கொல்கத்தா அணி புள்ளிப்பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியது. அதேவேளையில், 7 போட்டிகளில் ஒரேயொரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ள பஞ்சாப் அணி பிளே ஆஃப் வாய்ப்பை ஏறக்குறைய இழந்துவிட்டது.

Views: - 55

0

0