நடராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி : மேலும் ஒரு வீரருக்கு சிக்கல்… ஐதராபாத் – டெல்லி போட்டி இன்று நடக்குமா..?

Author: Babu Lakshmanan
22 September 2021, 3:37 pm
Quick Share

கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கொரோனா தொற்று உறுதியானதால், ஐதராபாத் – டெல்லி அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி நடக்குமா..? என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

கொரோனா தொற்றினால் ரத்து செய்யப்பட்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 19ம் தேதி முதல் நடந்து வருகிறது. கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியலும் ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டு, இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. வீரர்களும் கடுமையான கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை பின்பற்றி வருகின்றனர்.

இன்றைய லீக் ஆட்டத்தில் ஐதராபாத் – டெல்லி அணிகள் மோத இருக்கின்றன. இந்த சூழலில், ஐதராபாத் அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளரான தமிழகத்தைச் சேர்ந்த நடராஜனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதைத் தொடர்ந்து, அவருடன் தொடர்பில் இருந்த சக வீரர் விஜய் ஷங்கர், அணியின் மேலளார் விஜய் குமார், பிசியோதெரபிஸ்ட் ஷியாம் சுந்தர், மருத்துவர் அஞ்சனா வண்ணன், லாஜிஸ்டிக் மேலாளர் துஷ்கர் ஹேதார், வலைப் பயிற்சி பந்து வீச்சாளர் பெரியசாமி கணேசன் உள்ளிட்ட 6 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஐதராபாத் அணி இன்று டெல்லியை எதிர்த்து விளையாட உள்ள நிலையில், நடராஜனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது அணியின் நிர்வாகத்தினருக்கும், ரசிகர்களும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், திட்டமிட்டபடி போட்டி நடக்குமா..? என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால், நடராஜனுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டிருந்தாலும், இன்றைய லீக் ஆட்டம் திட்டமிட்டபடி நடக்கும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

ஏற்கனவே கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் கிரிக்கெட் தொடர், மீண்டும் ஒத்திவைக்கப்பட்டால், எங்களால் தாங்க முடியாதுப்பா..? என்று ரசிகர்கள் குமுறி வருகின்றனர்.

Views: - 473

0

0