கப்பு முக்கியம் பிகிலு.. பாகிஸ்தான் தோல்வியால் இந்திய அணிக்கு அடித்தது யோகம்… உடனே ஐபிஎல் தொடரில் மாற்றம் செய்யும் பிசிசிஐ!!

Author: Babu Lakshmanan
7 December 2022, 10:38 am
Quick Share

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்குவதில் சிறிது மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

14வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கிறது. இதற்கான ஆயத்தப் பணிகளை பிசிசிஐ தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்த தொடருக்கான மினி ஏலம் இந்த மாதம் நடைபெற இருக்கிறது. இதற்காக, 10 அணிகளும் தக்க வைக்கப்பட்ட வீரர்கள் மற்றும் வெளியேற்றப்பட்ட வீரர்களின் பட்டியலை ஐபிஎல் நிர்வாகத்திடம் சமர்பித்து விட்டன.

IPL -Updatenews360

இந்த முறை வீரர்கள் அணி மாறி விளையாட வாய்ப்பு இருப்பதால், ஐபிஎல் போட்டி மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

வழக்கமாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மார்ச் கடைசி வாரத்தில் தொடங்குவது வழக்கம். ஆனால், இந்த முறை டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி தகுதி பெற வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதால், மார்ச் 31 அல்லது ஏப்.,1ம் தேதி ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. தற்போதுள்ள புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் ஆஸ்திரேலியாவும், 2வது இடத்தில் தென் ஆப்பிரிக்காவும், 3வது இடத்தில் இலங்கை அணியும், 4வது இடத்தில் இந்திய அணியும், 5வது இடத்தில் பாகிஸ்தான் அணியும் உள்ளன.

பாகிஸ்தான் அணி தற்போது தனது சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகளிலும், நியூசிலாந்துக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட இருந்தது. இந்நிலையில், முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்ததால் அந்த அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இறுதிப்போட்டிக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அணியின் தோல்வியால் இந்திய அணிக்கு இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பு அதிகமாகி உள்ளது. இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இறுதிப்போட்டிக்கு முன்னேற வேண்டும் என்றால் முதலில் வங்கதேசத்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட தொடரை முழுமையாக கைப்பற்ற வேண்டும்.

அதன்பின் பிப்ரவரி மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவினாலும் கூட இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். இது பாகிஸ்தான் அடைந்த தோல்வியால் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள சாதகமாக கருதப்படுகிறது.

Views: - 376

0

0