‘புறவாசல் வழியே இந்தியாவிற்கு வரும் சீனா’ : ஐ.பி.எல். ஸ்பான்சராக செயல்பட டிரீம் லெவனுக்கு எதிர்ப்பு..!
19 August 2020, 5:16 pmலடாக் பிரச்சனையை தொடர்ந்து சீனாவுடனான வர்த்தக உறவை இந்தியா முற்றிலுமாக தவிர்த்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் டைட்டில் ஸ்பான்சராக இருந்து வந்த சீன நிறுவனமான விவோவின் ஒப்பந்தத்தை, அதன் ஒப்பந்த காலம் முடிவதற்கு முன்பாகவே முடித்து விட்டது பி.சி.சி.ஐ.
இதையடுத்து, அடுத்த மாதம் 19ம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்தப்படும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடருக்கான ஸ்பான்சர் குறித்த டெண்டரை பிசிசிஐ வெளியிட்டது. இதில், டிரீம் லெவன் 222 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்து, இந்த ஆண்டுக்கான டைட்டில் ஸ்பான்சராக தேர்வு செய்யப்பட்டது.
இந்த நிலையில் சீனாவைச் சேர்ந்த நிறுவனம் பங்குதாரராக இருக்கும் டிரீம் லெவன் நிறுவனத்தை ஸ்பான்சராக தேர்வு செய்ததற்கு, பிசிசிஐ அமைப்புக்கு பீகார் கிரிக்கெட் சங்கம் மற்றும் அனைத்து இந்திய வர்த்தகர்கள் (சிஏஐடி) கண்டனம் தெரிவித்துள்ளன. இதனால், ஐ.பி.எல். டைட்டில் ஸ்பான்சருக்கு டிரீம் லெவன் நிறுவனம் தொடர்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக பி.சி.சி.ஐ.க்கு இந்திய வர்த்தகர்கள் எழுதியுள்ள கடிதத்தில், “எல்லையில் தொடர்ந்து இந்தியாவிற்கு இடையூறு செய்து வரும் சீனாவிற்கு எதிராக இந்திய மக்கள் இருந்து வரும் நிலையில், அவர்களின் உணர்வுகளையும், மனநிலையையும் ஒதுக்கி வைத்து விட்டு, புறவழியில் சீன நிறுவனத்துக்கே ஸ்பான்சர் கொடுத்து இருக்கிறீர்கள்,” எனத் தெரிவித்துள்ளது.