கேப்டன் பதவியில் இருந்து விலகினார் தினேஷ் கார்த்திக்..! மோர்கன் தலைமையில் மும்பையை எதிர்கொள்ளும் கொல்கத்தா..!!!

16 October 2020, 2:21 pm
kkr - MI 2- updatenews360
Quick Share

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்றைய லீக் ஆட்டத்தில் மும்பை – கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

நடப்பு சாம்பியான மும்பை இந்தியன் அணி, இந்த தொடரிலும் சாம்பியன் சைடு என்பதை நிரூபிக்கும் வகையில் விளையாடி வருகிறது. இதுவரையில் விளையாடியுள்ள 7 ஆட்டங்களில் 5 வெற்றியுடன், 2 தோல்விகளுடன் 10 புள்ளிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. குறிப்பாக, மும்பை அணி கடைசியாக விளையாடிய 4 போட்டிகளிலும் வென்றுள்ளது.

அந்த அணியில், ரோகித் சர்மா, டி காக், பொல்லார்ட், ஹர்திக் பாண்ட்யா, பும்ரா, சூர்யகுமார், இஷான் கிஷன் என அனைத்து வீரர்களும் நல்ல ஃபார்மில் உள்ளனர். அசுர பலத்துடன் விளங்கும் மும்பை அணி, கொல்கத்தாவுக்கு எதிரான இன்றைய போட்டியிலும் ஆதிக்கம் செலுத்தி 5வது வெற்றியை பெறும் முனைப்பில் இருக்கும். அதோடு, இந்த சீசனில் ஏற்கனவே 49 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியிருப்பது அந்த அணிக்கு கூடுதல் நம்பிக்கையை கொடுக்கும்.

அதேவேளையில், முன்னாள் சாம்பியனான கொல்கத்தா அணி, தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தாலும், 7 ஆட்டங்களில் 4ல் வெற்றி பெற்றுள்ளது. பேட்டிங்கில் சற்று பலமாக இருந்தாலும், பந்து வீச்சில் சொதப்பலாகத்தான் இருந்து வருகிறது. எனவே, முன்னணி வீரர்கள் பொறுப்புடன் விளையாடினால், வெற்றி நிச்சயம் கிட்டும். எனவே, இன்றைய போட்டி பரபரப்பாக காணப்படும்.

இதனிடையே, கொல்கத்தா அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தினேஷ் கார்த்திக் விலகுவதாக அறிவித்துள்ளார். பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்துவதற்காக அந்தப் பொறுப்பில் இருந்து விலகுவதாக அவர் தெரிவித்தார். இதனால், இன்றைய போட்டியில் இருந்து இனி வரும் ஆட்டங்களுக்கு மோர்கன் கேப்டனாக செயல்பட உள்ளார்.

Leave a Reply