புனேவில் இருந்து ஒருநாள் போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்றுகிறதா பிசிசிஐ?

26 February 2021, 10:13 pm
Quick Share

புனேவில் கொரோனா வைரஸ் தற்போது அதிகளவில் பரவி வரும் காரணத்தால் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் ஒருநாள் போட்டிகள் வேறு இடத்திற்கு பிசிசிஐ மாற்றும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் தொடருக்குப் பின் இங்கிலாந்து அணி 5 டி-20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் ஒருநாள் போட்டிகள் அனைத்தும் புனேவில் நடக்கவுள்ளன. டி-20 போட்டிகள் அனைத்தும் அகமதாபாத்தில் நடக்கவுள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிராவில் தற்போது கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது.

அங்குப் புதிதாக 1542 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 8 பேர் மரணமடைந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக அந்த மாநிலத்தில் 403497 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று புதிதாக 8333 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் புனேவில் மட்டும் 765 பேருக்கு இந்த வைரஸ் பரவியுள்ளது.

இதையடுத்து இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடரை வேறு இடத்திற்கு பிசிசிஐ மாற்றம் செய்ய அதிக வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது பிசிசிஐ உள்ளூர் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபி கிரிக்கெட் தொடர் நாடு முழுதும் பல்வேறு மைதானங்களில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஒரு நகரத்தைத் தேர்வு செய்து ஒருநாள் போட்டிகளை அங்கு நடத்த திட்டமிடப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்த இறுதி முடிவை பிசிசிஐ உறுதியாகத் தெரிவிக்கவில்லை. வரும் மார்ச் 23, 26 மற்றும் 28 தேதிகளில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் மூன்று ஒருநாள் போட்டிகள் நடக்கவுள்ளன. இதற்கிடையில் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் இந்திய அணி வெற்றி அல்லது டிரா செய்தாலே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதிபெறும்.

Views: - 7

0

0