ஜேம்ஸ் ஆண்டர்சன் விசித்திர சாதனை… மெக்ராத்துடன் இணைந்து அசத்தல்!

4 March 2021, 4:38 pm
Quick Share

இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்டில் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் விசித்திர சாதனையை எட்டினார்.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இந்திய அணி 2-1 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று அகமதாபாத்தின் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் ஜோ ரூட் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். இந்த போட்டியிலும் இந்திய சுழற்பந்து வீச்சைச் சமாளிக்க முடியாத இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 205 ரன்களுக்கு சுருண்டது. இங்கிலாந்து அணிக்கு அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் (55), லாரன்ஸ் (46) ரன்கள் எடுத்தனர். இந்திய அணி சார்பில் அக்‌ஷர் படேல் (4 விக்கெட்), அஸ்வின் (3 விக்கெட்), சிராஜ் (2 விக்கெட்), சுந்தர் (1 விக்கெட்) விக்கெடுகளை கைப்பற்றினர்.

இந்நிலையில் இரண்டாவது இன்னிங்சை துவங்கிய இந்திய அணிக்கு துவக்க வீரர் சுப்மான் கில்லை இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் ‘டக்- அவுட்’ ஆக்கினார். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன் ரன் எடுக்கும் முன்பாகவே அதிகமுறை அவுட்டாக்கிய பவுலர்கள் பட்டியலில் முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் கிளன் மெக்ராத்தின் சாதனையைச் சமன் செய்தார். ஆண்டர்சன் இதுவரை 104 பேட்ஸ்மேன்களை ரன் அடிக்கும் முன்பாகவே வெளியேற்றியுள்ளார்.

இந்த பட்டியலில் முன்னாள் ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் ஷேன் வார்ன் (102) , இலங்கையின் சுழல் ஜாம்பவான் (102) ஆகியோர் இரண்டாவது இடத்தில் உள்ளனர். தென் ஆப்ரிக்காவின் வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயின் (83), வெஸ்ட் இண்டீஸின் வால்ஸ் (79), பாகிஸ்தானின் வாசிம் அக்ரம் (79), இங்கிலாந்தின் ஸ்டுவர்ட் பிராட் (78) ஆகியோர் அடுத்த மூன்று இடங்களில் உள்ளனர்.

Views: - 1

0

0