முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கபில் தேவுக்கு மாரடைப்பு..! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..!

23 October 2020, 3:02 pm
Kapil_Dev_Updatenews360
Quick Share

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கபில் தேவுக்கு இன்று பெரிய அளவிலான மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர் உடனடியாக டெல்லியில் உள்ள ஃபோர்டிஸ் எஸ்கார்ட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

61 வயதான புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் கபில் தேவுக்கு ஆஞ்சியோபிளாஸ்டி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவரது உடல்நிலை இப்போது சீராக இருப்பதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், அவரது உடல்நிலை குறித்து அவரது குடும்பத்தினரிடமிருந்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

அவர் ஏற்கனவே நீரிழிவு தொடர்பான சுகாதார பிரச்சினைகளையும் கொண்டிருந்தார் எனக் கூறப்படுகிறது. கபில் தேவின் மாரடைப்பு செய்தி அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஹரியானா சூறாவளி கபில் தேவ் விரைவாக மீட்கப்பட வேண்டும் என்று அவர்கள் சமூக ஊடக தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

1983’ஆம் ஆண்டு லார்ட்ஸில் நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா, வலிமைமிக்க மேற்கிந்தியத் தீவுகளைத் தோற்கடித்து, கோப்பையை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர் கபில் தேவ் என்பது குறிப்பிடத்தக்கது.

அக்டோபர் 1, 1978 அன்று குவெட்டாவில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவுக்காக அறிமுகமான கபில் தேவ் 131 டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். 434 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு 5,248 ரன்களையும் குவித்து சிறந்த ஆல்ரவுண்டராகவும் திகழ்ந்தார்.

கிரிக்கெட் வரலாற்றில் வெறும் 21 வயதில் 1000 ரன்கள் மற்றும் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய இளைய ஆல்ரவுண்டர் எனும் சிறப்பையும் அவர் பெற்றுள்ளார். 1994’இல் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர், அவர் இந்தியரின் தலைமை பயிற்சியாளராகவும் பணியாற்றினார். அவர் 1999’இல் அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

1980’இல் ரோமி பாட்டியாவை திருமணம் செய்து கொண்ட தம்பதியருக்கு அமியா என்ற மகள் உள்ளார். கபில் தேவ் செப்டம்பர் 24, 2008 அன்று இந்திய பிராந்திய இராணுவத்தின் கௌரவ லெப்டினன்ட் கர்னலாக நியமிக்கப்பட்டார்.

அவரின் வாழ்க்கை குறித்த வாழ்க்கை வரலாறும் பாலிவுட் திரைப்படமாக தயாரிக்கப்படுகிறது. 83 என்ற தலைப்பில் தயாராகும் இப்படத்தில் கபில் தேவ் வேடத்தில் ரன்வீர் சிங் நடிக்கிறார்.

Views: - 15

0

0