மிடில் ஆர்டர் சோதனையை கடந்து வெற்றிப்பாதைக்கு திரும்புமா கொல்கத்தா : இன்று பெங்களூருவுடன் மோதல்!!

18 April 2021, 9:36 am
Quick Share

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய 10வது லீக் போட்டியில் கொல்கத்தா அணி, புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது.

இந்தியாவில் 14 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் சென்னை எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் இன்று நடக்கவுள்ள 10வது லீக் போட்டியில் கொல்கத்தா அணி, பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. சர்வதேச கிரிக்கெட்டில் இரு மிகச்சிறந்த அணிகளுக்கு கேப்டனாக திகழும் வீரர்கள் நேருக்கு நேர் மோதுவதால், இன்றைய போட்டியில் ரசிகர்களுக்கு ஆர்வம் அதிகரித்துள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியைப் பொறுத்தவரையில் தங்களின் மோசமான மிடில் ஆர்டர் சரிவுக்கு தீர்வு கண்டுபிடித்து மீண்டும் இன்று வெற்றிப்பாதைக்கு திரும்ப குறிவைத்துள்ளது. ஹைதராபாத் அணிக்கு எதிராக வெற்றியை சந்தித்த கொல்கத்தா அணி, மும்பை அணிக்கு எதிராக மிடில் ஆர்டர் சரிவு காரணமாக 13 போட்டிகளில் 12வது தோல்வியை சந்தித்தது. பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்ட கொல்கத்தா அணி மும்பை அணியை 152 ரன்களுக்கு சுருட்டியது.

கடைசிநேர பவுலிங்கான டெத் பவுலிங்கில் புது அவதாரம் எடுத்துள்ள ஆண்ரே ரசல் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய இவர், கொல்கத்தா அணியை பேட்டிங்கில் கைகொடுத்தவறினார். இரண்டு போட்டிகளில் வெறும் 14 ரன்கள் மட்டுமே எடுத்துள்ள ரசல், பேட்டிங்கிலும் கைகொடுக்க முயற்சிக்க வேண்டும். இவரைப் போலவே துணைக் கேப்டன் தினேஷ் கார்த்திக்கும் பேட்டிங்கில் நெருக்கடியான நேரத்தில் கைகொடுக்க தவறினார்.

மறுபுறம் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியைப் பொறுத்தவரையில் டிவிலியர்ஸ், மேக்ஸ்வெல், தேவ்தத் படிக்கல், விராட் கோலி என பேட்டிங்கில் ஒரு ஸ்டார் பட்டாளமே உள்ளது. இவர்களை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பவுலர்கள் விரைவாக வெளியேற்ற முயற்சிக்க வேண்டும். பவுலிங் வரிசையில் ஹர்சல் படேல் மற்றும் ஹைதராபாத் அணியின் பேட்ஸ்மேன்களை ஒரே ஒவரில் அடுத்ததடுத்து அவுட்டாக்கிய ஷாபாஸ் அஹமது இன்றும் மிரட்ட காத்திருக்கின்றனர். மந்தமான சென்னை ஆடுகளத்தில் இரண்டாவதாக பேட்டிங் செய்வது மிகவும் கடினமாக உள்ள நிலையில் இன்று டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்ய அதிக வாய்ப்பு உள்ளது.

Views: - 61

0

0