‘தல’ தோனியில்லாமல் தவியாய் தவிக்கிறேன்… புலம்பும் குல்தீப் யாதவ்!

13 May 2021, 7:30 pm
Quick Share

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் வழிகாட்டுதல் இல்லாமல் உண்மையில் தவிப்பதாக இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்ப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் குல்தீப் யாதவ். ஒருகாலத்தில் குல்தீப் மற்றும் சஹால் ஆகியோர் இந்திய அணியின் தவிர்க்க முடியாத சுழற்பந்துவீச்சாளர்களாக இடம் பிடித்து வந்தனர். இவர்கள் இருவரும் இந்திய அணியில் இடம் பெற்றதோடு ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரின் கூட்டணியை மிஞ்சும் அளவுக்கு செயல்பட்டு வந்தனர். ஆனால் கடந்த ஆண்டு முதல் இது முற்றிலுமாக மாறிவிட்டது.

குல்தீப் மற்றும் சஹால் என இருவருமே ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் தங்களின் திறமையை நிரூபிக்க தவறி வருகின்றனர். இவர்கள் விளையாடும் லெவலில் தங்களின் இடத்தையும் பறிகொடுத்து வந்தனர். இந்தியா வந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இடம் பிடித்து குல்தீப் தற்போது இங்கிலாந்து செல்லும் இந்திய அணியில் இடம்பிடிக்கவில்லை. இந்நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த குல்திப் யாதவ் முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனியின் வழிகாட்டுதலை மிகவும் தவற விடுவதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து குல்தீப் கூறுகையில், “ஒரு சில நேரங்களில் போட்டியில் நான் பங்கேற்கும் போது தோனியின் வழிகாட்டுதலை மிகவும் தவற விடுகிறேன். ஏனென்றால் அவர் மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர். ஸ்டெம்பிற்கு பின்னால் நின்று எப்பொழுதும் எனக்கு வழிகாட்டி கொண்டே இருப்பார். எப்படி செயல்பட வேண்டும் என்பதை தெரிவித்துக் கொண்டே இருப்பார். அந்த அனுபவத்தை உண்மையில் நான் தவற விடுகிறேன்.

தற்போது விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் உள்ளார். ஆனால் அவர் இன்னும் போகப்போக எதிர்காலத்தில் ஒவ்வொரு விஷயங்களாக கற்றுக் கொண்டே இருப்பார். என்னை பொறுத்தவரையில் ஒரு பவுலருக்கு துணையாக மற்றொரு முனையில் இன்னொருவர் செயல்படுவது கூடுதல் பலமாக பார்க்கப்படும். தோனி கடைசியாக அணியில் இடம் பெற்ற பொழுது நானும் சஹாலும் ஒன்றாக விளையாடினோம். ஆனால் தோனி ஓய்வு பெற்ற பின் நானும் சஹாலும் இதுவரை ஒன்றாக விளையாட வாய்ப்பே கிடைக்கவில்லை. தோனி இருந்த போது நான் ஹாட்ரிக் விக்கெட் கூட் கைப்பற்றினேன். ஆனால் தற்போது எனது பவுலிங் எழுச்சிபெற போராடி வருகிறேன்” என்றார்.

Views: - 401

0

0