எங்கு தாவப்போகிறார் மெஸ்ஸி..! ‘கேச்’ செய்ய காத்திருக்கும் பிரபல கால்பந்து கிளப்புகள்..!

27 August 2020, 12:17 pm
Quick Share

பார்சிலோனா கால்பந்து கிளப் அணிக்காக 16 ஆண்டுகளாக விளையாடி வரும் அர்ஜென்டீனாவின் லியோனல் மெஸ்ஸி, ஒப்பந்தத்தை ரத்து செய்ய வக்கீல் நோட்டிஸ் அனுப்பியதன் மூலம் ‘விலகல்’ உறுதியாகி உள்ளது.

அர்ஜென்டீனா தேசிய கால்பந்து அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸிக்கு தற்போது 33 வயது ஆகிறது. தனது 13வது வயதிலேயே ஸ்பெயினில் உள்ள புகழ்பெற்ற பார்சிலோனா கால்பந்து கிளப்பில் இணைந்தார். அங்கு தீவிர பயிற்சி பெற்றவர் 17 வயதில் சீனியர் அணிக்காக கடந்த 2004 ஆம் ஆண்டு தனது முதல் போட்டியில் அறிமுகமானார்.

இதுவரை பார்சிலோனாவுக்காக 731 போட்டிகளில் விளையாடி 634 கோல் அடித்து சாதனை படைத்துள்ளார். இதில் லா லிகா சாம்பியன்ஷிப்பில் மட்டுமே 444 கோல் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பார்சிலோனாவுடனான ஒப்பந்தம் 2021 ஜூன் வரை நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில், லா லிகா தொடரில் 2வது இடம் பிடித்தது மற்றும் சாம்பியன்ஸ் லீக் காலிறுதியில் 2-8 என பேயர்ன் மியூனிக் அணியிடம் பரிதாபமாக தோற்றது மெஸ்ஸியை விரக்தியடைய செய்தது. அதனால் அவர் அணி மாறப்போவதாக மீண்டும் தகவல்கள் பரவின.

இந்நிலையில், மெஸ்ஸி தனது வக்கீல் மூலம் பார்சிலோனா அணி நிர்வாகத்துக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் அணியுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்து கொள்வதாக தெரிவித்துள்ளார்.

இருதரப்பும் விரைவில் பேச்சு வார்த்தையை தொடங்கி ஒப்பந்தம் ரத்து செய்வது குறித்தோ, வேறு அணிக்கு மாற்றுவது குறித்தோ முடிவு செய்யப்படும். சாம்பியன்ஸ் லீக்கில் 2வது இடம் பிடித்த பிரான்சின் பிஎஸ்ஜி, இங்கிலாந்தின் முக்கிய கிளப்களான மான்செஸ்டர் யுனைடட், மான்செஸ்டர் சிட்டி ஆகியவை மெஸ்ஸியை ஒப்பந்தம் செய்ய முனைப்பு காட்டுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 30

0

0