போன தடவ மிஸ் ஆயிடுச்சு…. ஆன இந்த தடவ!!! ஷமி, பும்ராவின் ஆல்ரவுண்டர் பர்ஃபாமன்ஸ்… இங்கிலாந்தை தட்டி தூக்கிய இந்திய அணி…!!
Author: Babu Lakshmanan17 August 2021, 9:07 am
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கெட் லார்ட்சில் கடந்த 12ம் தேதி தொடங்கியது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 364 ரன்களும், இங்கிலாந்து அணி 391 ரன்களையும் சேர்த்தது. 27 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு முன்கள வீரர்கள் ஏமாற்றத்தை கொடுத்தனர்.
கேஎல் ராகுல், ரோகித் ஷர்மா, விராட் கோலி, ஜடேஜா ஆகியோர் நீண்ட நேரம் தாக்குபிடிக்கவில்லை. புஜாரா (45) ரகானே (61) மட்டும் ஓரளவுக்கு ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தனர். 4ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 181 ரன்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்திருந்தது.
வெறும் 154 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், கடைசி நாள் ஆட்டத்தை இந்திய அணி தொடர்ந்தது. பண்ட் 22 ரன்னுடனும், இஷாந்த் ஷர்மா 16 ரன்னுடன் விக்கெட்டை பறிகொடுத்தனர். இதனால், இந்திய அணி 200 ரன்களை கூட இங்கிலாந்துக்கு இலக்காக நிர்ணயிக்குமா என்ற கேள்வி எழுந்தது.
ஆனால், 9வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஷமி – பும்ரா ஆகியோர் இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை சிதறடித்தனர். இங்கிலாந்து அணியின் பந்து வீச்சாளர்கள் எவ்வளவு முயற்சி செய்தும் இருவரின் விக்கெட்டை அவர்களால் கைப்பற்ற முடியவில்லை. இதனால், அந்த அணியின் ஆண்டர்சன் பும்ரா மற்றும் ஷமியிடம் வார்த்தை போரில் ஈடுபட்டார். அபாரமாக ஆடிய ஷமி 57 பந்துகளில் அரைசதம் விளாசினார். பின்னர், 298 ரன்கள் எடுத்திருந்த போது இந்தியா டிக்ளேர் செய்தது. ஷமி 56 ரன்களுடனும், பும்ரா 34 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதைத் தொடர்ந்து, 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி இங்கிலாந்து அணி, இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்தனர். அந்த அணியின் கேப்டன் ரூட் (33), பட்லர் (25), மொயின் அலி (13) ஆகியோரை தவிர மற்ற அனைவரும் ஒற்றை இலக்கில் வெளியேறினர். இதனால், இங்கிலாந்து 120 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்திய அணி தரப்பில் சிராஜ் 4 விக்கெட்டுக்களும், பும்ரா 3 விக்கெட்டும், இஷாந்த் ஷர்மா 2 விக்கெட்டும், ஷமி ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற இருந்த சூழலில் மழையால் ஆட்டம் டிரா ஆனது. ஆனால், இந்த முறை மிஸ்ஸே ஆகாது என்று இந்திய ரசிகர்கள் கமெண்ட்டுகளின் மூலம் வெற்றியை கொண்டாடி வருகின்றன.
1
0