விடாமல் விரட்டி விரட்டி துரத்தும் சோகம்… சாய்னியும் காயம் : இந்திய டீமிற்கு சிக்கல்!

15 January 2021, 3:39 pm
saini - updatenews360
Quick Share

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் காயம் அடைவது தொடர்கதையாக நீண்டு கொண்டே உள்ளது.

இந்தியா ஆஸ்திரேலிய அணிகள் மோதும் நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் இன்று துவங்கியது. இந்நிலையில் இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
இதையடுத்து முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 274 ரன்கள் எடுத்துள்ளது.

ஆஸ்திரேலிய அணிக்காக அதிகபட்சமாக லபுஷேன் 108 ரன்கள் அடித்தார். இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளரான சாய்னி காயம் அடைந்தார். இவர் இப்போட்டியில் தனது எட்டாவது ஓவரை வீசிய போது, வலியால் அவதிப்பட்டார். இவர் இந்த ஓவரில் ஐந்து பந்துகள் வீசிய நிலையில் தொடர்ந்து வலி நீடித்த காரணத்தால் களத்தில் இருந்து வெளியேறினார்.

அந்த ஓவரை ரோகித் சர்மா முழுமை செய்தார். இரண்டாவது சீசனின் போது காயமடைந்த சாய்னி நடுவில் வலியால் அவதிப்பட்டார். இதையடுத்து முதலுதவி பெற்றபின் வலி நீடித்ததால் பெவிலியனுக்கும் இவர் திரும்பும் நிலை ஏற்பட்டது. இதனால் எஞ்சியுள்ள 4 நாட்கள் ஆட்டத்தில் இவர் பங்கேற்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவர் ஸ்கேன் செய்ய மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரிஸ்பேனில் நடக்கும் நான்காவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்ற போது, சாய்னிக்கு இடுப்பு பகுதியில் வலி ஏற்பட்டது. இவரை பிசிசிஐயின் மருத்துவக் குழு தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். தற்போது அவர் ஸ்கேன் செய்ய மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்” என அதில் குறிப்பிட்டுள்ளது.

ஆஸ்திரேலிய தொடர் துவங்கியது முதலே இந்திய அணி தனது முக்கியமான வீரர்களை அடுத்தடுத்து காயம் காரணமாக இழந்து வருகிறது. முன்னதாக ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் காயம் காரணமாக நான்காவது டெஸ்டில் பங்கேற்க முடியவில்லை. இந்நிலையில் இந்தியா ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 4 போட்டிகள் கொண்ட தொடர் 1 – 1 எனச் சமநிலையில் உள்ளது. சிட்னியில் நடந்த மூன்றாவது போட்டி டிராவில் முடிந்தது. சிட்னியில் நடந்த 3வது டெஸ்டில் இந்திய அணிக்காக டெஸ்ட் அரங்கில் சாய்னி அறிமுகமானார். அந்த போட்டியில் 4 விக்கெட் வீழ்த்தினார் சாய்னி.

இந்நிலையில் இவர் பங்கேற்ற இரண்டாவது போட்டியில் காயமடைந்துள்ளார். இதனால் தற்போது இந்த போட்டியிலும் இந்திய அணியின் பவுலிங் பலம் குறைந்து உள்ளது. ஆனால் தற்போது 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது, எஞ்சியுள்ள 5 விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்தினால் இந்திய அணிக்குச் சாதகமாகப் போட்டி செல்ல வாய்ப்பு உள்ளது என விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

Views: - 7

0

0