கடைசி பந்தில் சிக்சர் அடித்த தமிழக வீரர்… ஸ்கெட்ச் போடும் தோனி… சென்னை சூப்பர் கிங்ஸுக்கு தட்டி தூக்கப் பிளானா..?

Author: Babu Lakshmanan
22 November 2021, 7:00 pm
Quick Share

சையது முஸ்தக் அலி கிரிக்கெட் தொடரில், கடைசி பந்தில் தமிழக அணி வெற்றி பெற்றதை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் கண்டு ரசித்தார்.

சையது முஸ்தக் அலி டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில், தமிழகம் மற்றும் கர்நாடகா அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற தமிழக அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய கர்நாடகா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக, அபினவ் மனோகர் 46 ரன்களும், பிரவீன் துபே 33 ரன்களும் சேர்த்தனர். தமிழக அணி தரப்பில், சாய் கிஷோர் 3 விக்கெட்டுக்களும், வாரியர், நடராஜன், சஞ்சய் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தமிழக அணிக்கு, ஹரி நிஷாந்த் (23), ஜெகதீசன் (41) சிறப்பான தொடக்கத்தை கொடுத்தாலும், டிபின்னர் வந்த வீரர்கள் சொதப்பினர். இதனால், வெற்றி கர்நாடகம் பக்கம் திரும்பியது. கடைசி ஓவரில் தமிழகம் அணி வெற்றிக்கு, 16 ரன்கள் தேவைப்பட்டது. சாய் கிஷோரும், ஷாருக்கானும் களத்தில் இருந்தனர். 5 பந்துகளில் 11 ரன்கள் சேர்த்த நிலையில், கடைசி பந்துக்கு 5 ரன்கள் தேவைப்பட்டது. இதனால், யார் வெற்றி பெறுவார்கள் என்று எதிர்பார்ப்பு எகிறியது.

இந்த நிலையில், பிரதீக் ஜெயின் வீசிய அந்தப் பந்தை தமிழக வீரர் ஷாருக்கான் சிக்ஸருக்கு பறக்க விட்டு, தமிழக அணிக்கு வெற்றியைத் தேடி தந்தார். இதன் மூலம், 3வது முறையாக தமிழக அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. ஆட்ட நாயகனாக ஷாருக்கான் தேர்வு செய்யப்பட்டார்.

இந்தப் போட்டியில் தமிழக அணிக்கு வெற்றியைத் தேடித் தந்த ஷாருக்கானின் சிறந்த ஃபினிஷிங்கை, உலக கிரிக்கெட் அரங்கில் தலைசிறந்த ஃபினிஷர்களில் ஒருவரும், சென்னை அணியின் கேப்டனுமான தோனி டிவியில் பார்த்து ரசித்தார். இதனை சிஎஸ்கே தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.

சிறப்பான ஆட்டத்தினால், ஷாருக்கான் தோனியின் மனதை கவர்ந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. எனவே, அடுத்த மாதம் நடைபெற இருக்கும் ஐபிஎல் ஏலத்தில் ஷாருக்கானை சென்னை அணி எடுக்க முயற்சிக்கும் என்று சொல்லப்படுகிறது. கடந்த சீசனில் ஷாருக்கான் பஞ்சாப் அணிக்காக விளையாடியது குறிப்பித்தக்கது.

Views: - 277

0

0

Leave a Reply