சரிந்த சிஎஸ்கேவின் மதிப்பு… முதலிடம் பிடித்த மும்பை இந்தியன்ஸ்!

Author: Udhayakumar Raman
10 March 2021, 5:45 pm
Quick Share

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் அணிகளில் கடந்த ஆண்டு மோசமான தோல்வி காரணமாகச் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மதிப்பு சரிந்து சரிவைச் சந்தித்து உள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்தது. இதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் முறையாக அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறாமல் வெளியேறியது. இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மதிப்பு மிகப்பெரிய சறுக்கலைச் சந்தித்துள்ளது. அதேநேரம் கடந்தாண்டு ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அதிக மதிப்பு கொண்ட அணியாகத் திகழ்கிறது.

தனியார் நிறுவனம் ஒன்று ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அணிகளின் மதிப்பு குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் கடந்த ஆண்டு மோசமான செயல்பாடு காரணமாகச் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஷாருக்கானின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் மதிப்பும் மிகப்பெரிய சரிவைச் சந்தித்துள்ளன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மதிப்பு சுமார் 16.5 சதவீதம் மதிப்பு குறைந்துள்ளது. அதாவது 732 கோடி ரூபாய் மதிப்பில் இருந்து ரூபாய் 611 கோடியாக உள்ளது. அதேநேரம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் மதிப்பு 13.5 சதவீதம் குறைந்து அதாவது 629 கோடியிலிருந்து, ரூபாய் 543 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் அணிகள் மதிப்புமிக்க அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி முதலிடம் பிடித்துள்ளது. கடந்த முறை ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்திய மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த ஆண்டில் 5.9% சரிவைச் சந்தித்த போதும், ரூபாய் 761 கோடிகளுடன் அதிக மதிப்புமிக்க அணிகள் பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது. அதேபோல மைதானத்துக்கு ரசிகர்கள் யாரும் வராத காரணத்தினால் ஐபிஎல் தொடரின் ஒட்டு மொத்த மதிப்பு 3.6 சதவீதம் அளவு கடந்த ஆண்டு சரிவைச் சந்தித்துள்ளது.

இதேபோல ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் மதிப்பு சுமார் 11% சரிந்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் ரசிகர்கள் இல்லாமல் நடத்தப்பட்ட போதும் தொலைக்காட்சி மூலமாகப் பார்த்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது. இதற்கிடையில் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி துவங்குகிறது.

Views: - 205

0

0

1 thought on “சரிந்த சிஎஸ்கேவின் மதிப்பு… முதலிடம் பிடித்த மும்பை இந்தியன்ஸ்!

Comments are closed.