ஆஸ்திரேலியா கொரோனா கட்டுப்பாடுகளுக்கு நடால், செரினா வில்லியம்ஸ் ஆதரவு!

27 January 2021, 10:50 pm
Quick Share

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு முன்னணி டென்னிஸ் நட்சத்திரங்களான ரபேல் நடால் மற்றும் செரினா வில்லியம்ஸ் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்க உலகெங்கிலும் இருந்து சுமார் 1200 பேர் மெல்போர்ன் வந்தடைந்துள்ளார். இவர்களுக்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படும் என்ற கடுமையான விதி அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஒரு நாளைக்கு 5 மணி நேரம் மட்டுமே பயிற்சி மேற்கொள்ள வழங்கப்படுகிறது.

இந்நிலையில் பல்வேறு இடங்களிலிருந்து வந்த 3 விமானங்களில் பயணித்த பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து 72 வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இந்நிலையில் முன்னணி வீரர்களான நடால், செரினா வில்லியம்ஸ் மற்றும் ஜோகோவிச் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இந்த தனிமைப்படுத்தப்படுத்தும் முறைக்கு மாற்று வழியில்லை என்றும் இதைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டுமென முன்னணி நட்சத்திர வீரர்களான நடால் மற்றும் செரினா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து நடால் கூறுகையில், “ இங்கே வந்தபிறகு தான் கொரோனா எந்தளவு பரவுகிறது எனப் புரிந்து கொள்ள முடிகிறது. இதைக் கட்டுப்படுத்த இந்த நாட்டு அரசு மிகவும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இது மிகவும் சகஜமான ஒன்றுதான். இதை யாரும் குறைகூற முடியாது. கொஞ்சம் சிந்தனையுடன் பார்க்கும் போது உலகின் பல்வேறு பகுதிகளில் பலர் உயிரிழக்கின்றனர் என்பது புரியும். எத்தனை மக்கள் தங்களின் தந்தை, தங்களின் தாய், ஆகியோரை பிரிந்து வாடுகின்றனர். இது எனது நாட்டிலும் நடந்து கொண்டு தான் உள்ளது. அதனால் இந்த சூழ்நிலையைக் குறை சொல்ல முடியாது. இந்த சூழலில் நாம் நேர்மறையான எண்ணத்துடன் செயல்பட முயல்வது சிறந்த வழியாகும்” என்றார்.

இதேபோல பெண்கள் பிரிவில் பங்கேற்கும் முன்னணி நட்சத்திர வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் இந்த தனிமைப்படுத்தல் முறையைப் பின்பற்றி ஆகவேண்டும். அதுதான் ஒரே வழி என்றும், மூன்று வயது குழந்தையுடன் ஒரு நாள் முழுவதும் ஹோட்டலில் ரூமிலேயே முடங்கிக்கிடப்பது மிகவும் கடினமான விஷயம்தான் என்றாலும், ஒவ்வொருவரின் பாதுகாப்பைக் கருதி அதுதான் சிறந்த வழி என்றும் அவர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக ஆஸ்திரேலியாவில் பின்பற்றப்படும் கடுமையான விதிகளைப் பலரும் விமர்சித்து வரும் நிலையில், முன்னணி நட்சத்திரங்கள் அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது மக்களிடையே அதிக விழிப்புணர்வை ஏற்படுத்தும் என அந்நாட்டு அரசாங்கம் கருதுவதாகத் தெரிகிறது.

Views: - 0

0

0