3 விதமான கிரிக்கெட்டிலும் நிரந்தர இடத்தை குறிவைக்கும் நடராஜன்!

2 February 2021, 12:32 pm
Quick Share

மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் நிரந்தர இடத்தை குறிவைப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஐந்து மாதங்களாகத் தொடர்ச்சியாக கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று வரும் நடராஜனுக்கு தற்போது சிறு ஓய்வு கிடைத்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த 29 வயதான வேகப்பந்துவீச்சாளர் நடராஜன். ஆஸ்திரேலியா தொடருக்கு முன்பாக நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் வெளிச்சத்துக்கு வந்தார்.

அடுத்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தால் அந்த வாய்ப்பை சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டார் நடராஜன். இந்நிலையில் இந்த தொடருக்குப் பின்பாக பணிச்சுமை காரணமாக தற்போது இவருக்குச் சிறு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் நிரந்தரமான இடத்தைப் பிடிப்பதே தனது இலக்கு என்று நடராஜன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நடராஜன் கூறுகையில், “கடந்த சில மாதங்களாகத் தொடர்ச்சியாக விளையாடி வருகிறேன். ஆனால் ஒரு சிறு இடைவேளை எடுத்துக்கொள்வது மிகவும் அவசியமானது என்பதும் புரிகிறது. கடந்த ஆறு மாதங்களாக எனது குடும்பத்துடன் நேரம் செலவிட முடியாத காரணத்தினால் இந்த ஓய்வு எனக்கு அவசியமான ஒன்றாக உள்ளது. சென்னையில் போட்டிகள் நடக்கும்போது பங்கேற்க முடியாது சிறு வருத்தம் அளிக்கிறது.

இந்திய அணியின் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகும் போது பயிற்சியாளர் ரவி சாஸ்திரி எனக்கு மிகவும் ஊக்கம் அளித்தார். முதல் போட்டிக்கு முன்பாக இதுவரை நான் என்ன செய்து கொண்டிருந்தேனோ அதையே அதிக தன்னம்பிக்கையுடன் செய்யவேண்டுமென்று கூறினார். அவர் போன்ற ஒரு சிறந்த வீரரிடம் வந்த வார்த்தைகள் எனக்கு மேலும் உற்சாகத்தை அளித்தது. அதேபோல இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்ற வீரர்களும் ஊழியர்களும் எனக்கு மிகவும் ஆதரவளித்தனர். இது எனக்கு அவர்களுடன் நீண்ட நாட்கள் விளையாடியது போன்ற உணர்வை அளித்தது.

இந்த ஓய்வில் எனது உடற்தகுதியை அப்படியே தொடர விரும்புகிறேன். எனது விளையாட்டு நுணுக்கங்கள் ஓரளவு திருப்தி அளித்தாலும் மேலும் இதை மேம்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். அதேநேரம் இந்திய கிரிக்கெட் அணிக்காக மூன்று விதமான போட்டிகளிலும் நிரந்தரமான இடத்தைப் பிடிப்பதே எனது இலக்காக உள்ளது. குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இடத்தை தக்கவைத்துக் கொள்வது கடினமான விஷயம்” என்றார்.

Views: - 0

0

0