ஈட்டியால் உச்சத்திற்கு சென்ற நீரஜ் சோப்ரா…!! வெறும் 23 வயதில் ஒலிம்பிக்கில் சாதித்தது எப்படி..?
Author: Babu Lakshmanan7 August 2021, 6:57 pm
டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் தங்கம் வென்றதன் மூலம் தற்போது உலகத்தை தனது பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் வெறும் 23 வயதேயான இளம் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா. அனுபவமிக்க, சர்வதேச தரத்திலான பயிற்சிகளைப் பெற்ற உலக நாடுகளைச் சேர்ந்த வீரர்களை பின்னுக்கு தள்ளி, முதலிடம் பிடித்துள்ளார்.
இந்த சாதனையை வெறும் அதிர்ஷ்டத்தினால் கிடைத்தது என்று சொல்லுவதற்கு, அவர் நேற்றைய மழையில் முளைத்த காளான் அல்ல. 2013ம் ஆண்டு முதலே இந்தியாவுக்காக பல்வேறு சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு, பல பதக்கங்களையும் வென்றிருக்கிறார். சர்வதேச போட்டிகளில் கிடைத்த வெற்றி மற்றும் தோல்விகளின் அனுபவமே இன்று இந்தியாவுக்கு கிடைத்திருக்கும் தங்கமாகும்.
முதன் முறையாக உக்ரைனில் நடந்த வேர்ல்ட் யூத் சாம்பியன்ஷிப் மற்றும் சீனாவில் நடந்த ஏசியன் சாம்பியன்ஷிப்பில் அவர் சந்தித்தது தோல்வியைத்தான். இதைத் தொடர்ந்து, சவுத் ஏசியன் கேம்ஸில் முதலிடம் பிடித்து, வெற்றிக் கணக்கை தொடங்கினார். அப்போது, அவருக்கு 19 வயது.
இளம் கன்று பயமறியாது என்பதை அப்போதே உணர்த்திய நீரஜ் சோப்ரா, 20 வயதுக்குட்பட்டோருக்கான சாம்பியன்ஷிப், ஏசியன் சாம்பியன்ஷிப்ஸ், காமன்வெல்த் கேம்ஸ், பிரான்ஸில் நடந்த தடகளப் போட்டி, சேவோ கேம்ஸ் மற்றும் ஏசியன் கேம்ஸ்களை முதலிடம் பிடித்து தனக்கென்று ஒரு முத்திரையை பதித்தார்.
ஈட்டி எறிதலில் ஈட்டி எவ்வாறு உயர உயரப் பறக்குமோ… அதுபோல, தனது அசாத்திய திறமையினால் இந்தியாவுக்காக ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பையும் பெற்றார்.
தனது 23வது வயதில் டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டியை கையில் எடுத்த நீரஜ் சோப்ரா, தன்னுடன் போட்டியிட்ட சர்வதேச வீரர்களை அன்னாந்து பார்க்க வைத்து விட்டார். ஆரம்பச் சுற்று முதல் இறுதிச் சுற்று வரை முதலிடத்தை விட்டு நகராத நீரஜ் சோப்ரா, இறுதிச் சுற்றில் தனக்கு கிடைத்த 2வது வாய்ப்பிலேயே தங்கப்பதக்கத்திற்கான தூரத்தை அடைந்து விட்டார்.
ஆனால், சக வீரர்கள் ஈட்டியை எறியும் ஒவ்வொரு நிமிடமும், இந்தியர்களின் வயிற்றில் புளியை கரைத்தது. ஆனால், நீரஜ் சோப்ராதான் தங்கம் பதக்கத்தை பெற சரியான நபர் என்பதை சிறிது நேரத்திலேயே சக போட்டியாளர்கள் உணர்ந்து கொண்டனர்.
13 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு நீரஜ் சோப்ரா இன்று பெற்றுக் கொடுத்த தங்கப்பதக்கத்தின் மூலம், இந்திய தடகள ஒலிம்பிக் வரலாற்றில் இருந்த கரையையும் அவர் துடைத்தெரிந்து விட்டார். தற்போது இந்தியாவே அவரை தோளில் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறது. அவர் பிறந்த மாநிலமான ஹரியானாவும் ரூ.6 கோடியை பரிசாக தூக்கிக் கொடுத்துள்ளது.
ஒலிம்பிக் தடகளத்தில் சாதனை படைத்த இளம் வீரர் நீரஜ் சோப்ராவை முன்னுதாரணமாகக் கொண்டு, இன்னும் பல நீரஜ் சோப்ராக்கள் இனி இந்தியாவுக்கு பெருமைத் தேடி தர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
1
1