டோக்கியோ ஒலிம்பிக்கை குறிவைக்கும் லியாண்டர் பயஸ்!

26 January 2021, 2:14 pm
paes - updatenews360
Quick Share

டோக்கியோவில் நடக்க உள்ள ஒலிம்பிக் போட்டியில் நிச்சயமாக பங்கேற்பேன் என இந்திய டென்னிஸ் வீரரான லியாண்டர் பயஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சர்வதேச அளவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ், கடந்த ஆண்டு விளையாட்டு உலகின் ஒட்டுமொத்த அட்டவணையை மாற்றி அமைத்தது எனலாம். இதனால் முன்னணி நட்சத்திர விளையாட்டு வீரர்கள் சரியாக போட்டிகளில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதற்கிடையில் கடந்த ஆண்டு டோக்கியோவில் நடக்கவிருந்த ஒலிம்பிக் போட்டிகள் இந்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று பதக்கம் வெல்லும் கனவில் இருந்தவர்களுக்கு இது பெரும் பின்னடைவாக கருதப்பட்டது. இந்நிலையில் இந்தாண்டும் ஒலிம்பிக் போட்டிகளை திட்டமிட்டபடி நடத்த முடியுமா என்ற சந்தேகத்தில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி திணறி வருகிறது. இந்நிலையில் இந்திய முன்னணி டென்னிஸ் வீரரான லியாண்டர் பயஸ் தற்போதும் தன்னால் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளதாக தெரிவித்துள்ளார். 47 வயதான லியாண்டர் பயஸ் இந்த முறை ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் பட்சத்தில் அது இவர் பங்கேற்கும் எட்டாவது ஒலிம்பிக் போட்டியாக அமையும்.

இதுகுறித்து பயஸ் கூறுகையில், “ இந்த முறை டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடக்குமா அல்லது நடக்காதா என்ற சந்தேகம் உள்ளது. ஆனால் அதில் பங்கேற்பேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. நான் இந்தியாவின் பெயர் சாதனை புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என நினைக்கிறேன். இந்தியாவை சேர்ந்த டென்னிஸ் வீரர் ஒருவர் தனது நாட்டிற்காக எட்டு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றார் என்ற பெருமையை இந்தியாவிற்கு அளிக்க நான் அதிகம் ஆசைப்படுகிறேன்.

ஆனால் சுமார் 11 மாதங்களாக விளையாட்டுப் போட்டிகளிலும் பங்கேற்காமல் நேரடியாக ஒலிம்பிக்கில் சாதிப்பது சாதாரண விஷயம் அல்ல. குறிப்பாக இந்த வயதில் இது ஏற்கனவே இருக்கும் சிக்கலை விட இரண்டு மடங்கு அதிகம். அதனால் எனது உடல் மற்றும் மனநிலையை எப்போதும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள விரும்புகிறேன். அதற்காக தினமும் மூன்று மணி நேரம் பயிற்சி மேற்கொண்டு வருகிறேன்.

டென்னிஸ் போட்டிகளில் பாதுகாப்பான முறை சூழலில் இருந்து என்னால் விளையாடுவது மிகவும் கடினமான விஷயம். அதனால் ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் இருந்து நான் விலகி இருக்கிறேன். பிரெஞ்சு ஓபன் போட்டியில் பங்கேற்க முடியும் என நம்புகிறேன். ஏனென்றால் ஐரோப்பாவில் தற்போதைய சூழ்நிலை அந்தளவு மோசமாக இல்லை. அதனால் அங்கு பங்கேற்க முடியும் என நம்புகிறேன்” என்றார்.

இந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் பிரிவில் செர்பியாவின் ஜோகோவிச், பெண்கள் பிரிவில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் கோப்பை கொள்வார்கள் என்றும் பயஸ் கணித்துள்ளார்.

Views: - 9

0

0