பாக்., முன்னாள் கேப்டன் இன்சமாம் திடீரென மருத்துவமனையில் அனுமதி : பிரார்த்தனையில் ரசிகர்கள்…!!
Author: Babu Lakshmanan28 September 2021, 2:07 pm
நெஞ்சு வலி காரணமாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் -உல்-ஹக், லாகூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மறக்க முடியாத சில வீரர்களில் ஒருவராக இருப்பவர் இன்சமாம் -உல்-ஹக். இவர் பாகிஸ்தானுக்காக 375 ஒருநாள் போட்டிகளில் 11,701 ரன்களை சேர்த்தார். இதுவே பாகிஸ்தான் வீரரின் அதிகபட்சமாக ஸ்கோர் என்ற சாதனையையும் படைத்தார். 1992ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற பாகிஸ்தான் அணியில் இன்சமாமும் இடம்பெற்றிருந்தார்.
இதைத் தொடர்ந்து 2007ம் ஆண்டில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அவர், பாகிஸ்தான் அணியின் பேட்டிங் ஆலோசகர், தலைமை தேர்வாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார்.
இந்த நிலையில், இன்சமாம்-உல்-ஹக்கிற்கு கடந்த மூன்று நாட்களாக நெஞ்சு வலி இருந்ததால், லாகூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதற்கட்ட பரிசோதனையில் எந்த பாதிப்பும் தென்படாத நிலையில், அடுத்து நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.
இதையடுத்து உடனடியாக அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அவர் விரைந்து குணமடைய வேண்டும் என்று அவரது ரசிகர்களும், கிரிக்கெட் பிரபலங்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்
0
0