ரத்து செய்யப்படுகிறதா டோக்கியோ ஒலிம்பிக் போட்டி: 3,51,000 பேர் கையெழுத்திட்டு மனு!

14 May 2021, 3:45 pm
Quick Share

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை ரத்து செய்ய சுமார் 3 லட்சத்து 51 ஆயிரம் பேர் கையெழுத்திட்டு கவர்னரிடம் மனு அளித்துள்ளனர்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இந்நிலையில் உலகம் முழுதும் கொரோனா வைரசின் தாக்கம் அதிகளவில் உள்ளதால், மக்களின் உயிருக்கு முன்னுரிமை அளித்து டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை ரத்து செய்ய வேண்டும் என சுமார் 3 லட்சத்து 51 ஆயிரம் பேர் கையெழுத்திட்டு மனுவாக கவர்னரிடம் அளித்துள்ளனர்.

இதற்கிடையில் இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்பட வேண்டுமா அல்லது நடத்தப்பட வேண்டுமா அல்லது ஒத்திவைக்கப்பட்ட வேண்டுமா என்று கருத்துக் கணிப்பில் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது. இந்நிலையில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஒலிம்பிக் போட்டிகளை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கையும் பலரும் முன்வைத்து வருகின்றனர். இந்த மனுவின் பிரதி சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி மற்றும் சர்வதேச பாரா ஒலிம்பிக் கமிட்டி ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

ஜப்பானில் கொரோனா வைரஸின் 4வது அலை பரவி வருகிறது. இதனால் அங்கு ஐந்து மாநிலங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற சூழலில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது முறையாக இருக்காது என்றும் அதில் பங்கேற்கும் தடகள வீரர்கள் மற்றும் ஜப்பான் மக்களின் பாதுகாப்பு பாதிக்கப்படும் என்றும் கருதுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒலிம்பிக் போட்டிகள் அதிகாரபூர்வமாக ரத்து செய்யப்படும் வரை இந்த கையெழுத்து தொடர்ந்து மக்கள் மத்தியில் பெறப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக ஒலிம்பிக் நிர்வாக கமிட்டியில் ஒருங்கிணைப்பாளர்கள் குழுவும் சில சோதனை போட்டிகளை சர்வதேச தடகள வீரர்களை வைத்து வெற்றிகரமாக நடத்தியுள்ளது. இது ஒலிம்பிக் போட்டிகளை வெற்றிகரமாக நடத்த உதவும் என்று அந்த நிர்வாக கமிட்டி நம்புவதாக கூறப்படுகிறது. ஆனால் சர்வதேச அளவில் டென்னிஸ் உள்ளிட்ட சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வரும் ஜப்பான் வீரர்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த கூடாது ரத்து செய்ய வேண்டும் என்ற குரலும் மறுபுறம் வலுத்து வருகிறது.

Views: - 507

0

0