5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி…!!!கொல்கத்தாவுக்கு பதிலடி கொடுத்த பஞ்சாப்

Author: kavin kumar
2 October 2021, 12:03 am
Quick Share

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று நடைபெற்ற 45-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில் மற்றும் வெங்கடேஷ் களமிறங்கினர். கில் 7 பந்துகளில் 77 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரவி பிஸ்மானி பந்துவீச்சில் வெளியேறினார். அடுத்துவந்த திரிபாதி தொடக்க வீரர் வெங்கடேஷ் உடன் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். திரிபாதி 26 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். ஆனால், அதிரடியாக ஆடிய வெங்கடேஷ் அரைசதம் கடந்தார். அவர் 49 பந்துகளில் 67 ரன்கள் குவித்த நிலையில் ரவி பிஸ்மானி பந்துவீச்சில் அவுட் ஆனார். அடுத்துவந்த நிதிஷ் ராணா 18 பந்துகளில் 31 ரன்கள் குவித்து அவுட் ஆனார். இறுதியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணியின் அர்ஷ்தீப் சிங் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தொடர்ந்து 166 ரன்கள் கொண்ட இலக்கை துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் கேஎல் ராகுல் – மயங்க் அகர்வால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு நல்ல துவக்கத்தை கொடுத்தனர். இதில் 3 சிக்ஸர் 3 பவுண்டரிகளுடன் 27 பந்துகளில் 40 ரன்கள் எடுத்த மயங்க் அகர்வால் வருண் சக்கரவர்த்தி சுழலில் சிக்கி அவுட் ஆனார். பின்னர் களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் (12), ஐடன் மார்க்ரம் (18) தலா ஒரு சிக்க்ஸரை விளாசி ஆட்டமிழந்தனர். தீபக் ஹூடா பூஜ்ஜிய ரன்னில் நடையை கட்டவே பஞ்சாப் அணி 16.3 ஓவரில் 134 ரன்கள் சேர்த்திருந்தது. இதனால் அணி வெற்றி இலக்கை அடையுமா என்ற சந்தேகம் எழுந்த நிலையில் தொடக்க வீரர் கேஎல் ராகுலுடன் ஜோடி சேர்ந்த ஷாருக் கான் அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

பஞ்சாப் அணியின் வெற்றிக்காக இறுதி வரை போராடிய கேப்டன் கேஎல் ராகுல் அரைசதம் கடந்து 55 பந்துகளில் 67 ரன்கள் ( 2 சிக்ஸர், 4 பவுண்டரி உட்பட) குவித்து ஆட்டமிழந்தார். அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்ற ஷாருக் கான் 9 பந்துகளில் 22 ரன்கள் (2 சிக்ஸர், 1 பவுண்டரியுடன்) சேர்த்து களத்தில் இருந்தார்.ஏற்கனவே நடந்த லீக் ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியிடம் தோல்வியை தழுவிய பஞ்சாப் அணி தற்போது பதிலடி கொடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை சுவைத்துள்ளது. இந்த திரில் வெற்றியின் மூலம் அந்த அணி பிளே- ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை தக்கவைத்துள்ளது. மேலும் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்திற்கு நகர்ந்துள்ளது. தோல்வியை தழுவியுள்ள கொல்கத்தா அணி 4வது இடத்திலே நீடிக்கிறது.பஞ்சாப் அணியின் இந்த வெற்றியின் மூலம் டெல்லி கேபிட்டல்ஸ் அணி பிளே- ஆப் சுற்றுக்கு 2வது அணியாக தகுதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 383

0

0