பஹர் ஜமானை கையைக்காட்டி ஏமாற்றினாரா குயிண்டன் டி காக்… நடந்தது என்ன?

5 April 2021, 6:04 pm
Quick Share

தென் ஆப்பிரிக்கா பாகிஸ்தான் அணிகள் மோதிய 2வது ஒருநாள் போட்டியின்போது சர்ச்சைக்குரிய முறையில் அவுட்டாக்கிய குயிண்டன் டி காக்கை அனைவரும் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி வென்றது. இரு அணிகள் மோதிய 2ஆவது ஒருநாள் போட்டி ஜோகானஸ்பார்க் மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் தென் ஆப்பிரிக்கா அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-1 எனச் சமன் செய்தது.

இதற்கிடையில் இந்த போட்டியில் பாகிஸ்தான் வீரர் பஹர் ஜமான் 193 ரன்கள் எடுத்து கடைசி வரை பாகிஸ்தான் அணியின் வெற்றிக்காகப் போராடினார். இந்த போட்டியில் ஜமான் ரன் அவுட்டானார். இதற்குத் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பராக குவின்டன் டி காக்கை பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஏனென்றால் பஹர் ஜமான் இரண்டாவது ரன் எடுக்க ஓடி வந்த பொழுது அவர் பார்வையில் படும்படி கையை அசைத்தார் டி காக்.

இது பஹர் ஜமானை திசை திரும்பும் விதமாக அமைய, ஜமான் பின்னோக்கிப் பார்த்துக்கொண்டே ஓடினார். ஆனால் அதற்குள் வந்த பந்து ஸ்டெம்ப்பை பதம்பார்க்க ஜமான் விக்கெட்டை இழந்து அவுட் ஆனார். இந்த சம்பவம் பரவலாகச் சர்ச்சையாகி வருகிறது. பாகிஸ்தானில் டிகாக்கை ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். அதேநேரம் தென் ஆப்பிரிக்கா அணி வீரர்கள் டிகாக் மீது எந்த தவறும் இல்லை என்று தங்கள் வசம் உள்ள நியாயத்தைத் தெரிவித்து வருகின்றனர்.

ஐசிசி விதிகளின்படி போட்டியின் நடுவே ஒரு பில்டர் பேட்ஸ்மேனை திசைதிருப்பும் முயற்சிகளில் ஈடுபட்டால் அது வார்த்தை மூலமாகவோ, செயலின் மூலமாகவோ பேட்ஸ்மேனை திசைதிருப்பச் செயலில் ஈடுபடுவது தவறாகும். இந்த தவறுக்கு எதிரணிக்கு அம்பயர்கள் 5 ரன்கள் அபராதம் விதிக்கலாம். மேலும் அடுத்த பந்தை எந்த பேட்ஸ்மேன் எதிர் கொள்ளலாம் என்பதையும் எதிரணி வீரர்கள் தீர்மானிக்க அவர்களுக்கு உரிமை உள்ளது என்பதே விதியாகும்.

இதற்கிடையில் இந்த சர்ச்சை முறையில் அவுட்டான ஜமான், குயின்டன் டி காக் மீது எந்த ஒரு தவறும் இல்லை என்று தற்போது தனது மவுனத்தைக் கலைத்து உள்ளார். அவுட்டானதற்கு முழுப்பொறுப்பும் தன்னுடைய தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து ஜமான் கூறுகையில், “இந்த விஷயத்தில் தவறு முழுவதுமாக என் மீதுதான் உள்ளது. நான் பின்னோக்கி சென்ற வீரர் எல்லைக்கோட்டை எட்டி விட்டாரா என்பதில் கவனம் செலுத்தவே திரும்பிப் பார்த்தேன். நான் அவரது முனையில் தான் பில்டர் பந்தை எறிந்தார் என்று நினைத்தேன். இதில் விக்கெட் கீப்பராக இருந்த டிகாக் மீது எந்த தவறும் இல்லை” என்றார்.

Views: - 4

0

1