இந்திய அணி பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமனம்: இந்திய அணி பல உயரங்களை அடையும் என நம்பிக்கை

Author: kavin kumar
3 November 2021, 11:05 pm
Quick Share

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக தற்போது ரவி சாஸ்திரி இருந்து வருகிறார். அவருடைய பதவிக் காலம், இந்த டி20 உலகக் கோப்பைத் தொடருடன் முடிவடைகிறது. அதனால், தலைமைப் பயிற்சியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு பி.சி.சி.ஐ விண்ணப்பங்களைக் கோரியிருந்தது. இதையடுத்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்கு ராகுல் டிராவிட் விண்ணப்பித்தார். இந்த நிலையில் இவரது விண்ணப்பத்தை ஏற்று இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டை நியமனம் செய்து பிசிசிஐ தலைவர் கங்குலி அறிவித்தார்.

மேலும் இதுதொடர்பான அறிவிப்பில், ‘இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக பதவியேற்கும் ராகுல் டிராவிட்டை வரவேற்கிறேன். அவர் கிரிக்கெட் போட்டிகளில் மிகச்சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்தியிருக்கிறார். தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக ராகுல் டிராவிட் சேவை செய்துள்ளார். அதன்மூலம், இளம் வீரர்களை இந்திய அணிக்காக தயார் செய்துள்ளார். அவருடைய புதிய பயணம் இந்திய அணி புதிய உயரத்துக்கு அழைத்துச் செல்லும் என்று நம்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி முடிவடைந்தவுடன் ராகுல் டிராவிட் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக பதவியேற்றுக் கொள்வார் என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து ராகுல் டிராவிட்டுக்கு கிரிக்கெட் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இதுகுறித்து ராகுல் டிராவிட் கூறுகையில், ‘இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளது எனக்கு உண்மையில் பெருமைக்குரியது. நான் இந்தப் பணியை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். ரவி சாஸ்திரியின் தலைமையில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. அந்த அணியை முன்னோக்கி அழைத்துச் செல்லவிரும்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

Views: - 650

0

0