கையை கொடூரமாக கடித்த கஜகஸ்தான் வீரர்.. விடாப்பிடியாக வெற்றியை பறித்த ரவிக்குமார் : ஒலிம்பிக்கில் வெளிப்பட்ட போராட்ட குணம்..!!

Author: Udhayakumar Raman
4 August 2021, 11:28 pm
Quick Share

டோக்கியோ ஒலிம்பிக்கில் மீராபாய் சானு, பிவி சிந்து மற்றும் லவ்லினா ஆகியோரின் வெற்றியைத் தொடர்ந்து, அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகளில் அடுத்தடுத்து இந்திய வீரர்கள் தோல்வியை தழுவியது இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தது. இந்நிலையில், மல்யுத்தத்தில் ரவிகுமார் தாஹியா இறுதிப்போட்டிக்கு முன்னேறி வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்தது இந்திய ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்று நடந்த ஆடவர் 57 கிலோ உடல் எடை ஃப்ரீஸ்டைல் பிரிவில் கஜகஸ்தான் வீரர் நூரிஸ்லாம் சனயேவை, ரவிகுமார் தாஹியா எதிர்கொண்டார். கடும் போட்டிக்கு பிறகு 5-9,7-9 புள்ளிகள் பெற்று கஜகஸ்தான் வீரர் நூரிஸ்லாம் சனயேவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். மேலும் இறுதிப் போட்டியில் தங்கம் வெல்வதற்கான வாய்ப்பும் ரவி தாஹியாவுக்கு ஏற்பட்டு உள்ளது. இதனிடையே, இறுதிப்போட்டிக்கு முன்னேற இந்திய வீரர் ரவிகுமார் போராடிய போது, கஜகஸ்தான் வீரர் வெற்றிக்காக விதிகளை மீறியதும், அதனை பொருட்படுத்தாமல் வெற்றியை ரவிக்குமார் தக்க வைத்ததும் தற்போது தெரிய வந்துள்ளது.

கஜகஸ்தான் வீரரை தனது கையால் வளைத்து பிடித்து கொண்டிருக்கும் போது, விதிகளை மீறிய சனயே, ரவிக்குமாரின் கையை மிகவும் கொடூரமாக கடித்து வைத்துள்ளார். அந்த வலியையும் பொருட்படுத்தாமல், அவர் விடாப்பிடியாக போராடி புள்ளிகளை குவித்து இறுதிக்கு முன்னேறியுள்ளார். போட்டியின் முடிவில் ரவிக்குமாரின் கைகளில் எதிரணி வீரர் கடித்ததில் காயம் ஏற்பட்டுள்ளது. போட்டியாளர் வெற்றிக்காக குறுக்கு வழியை கையில் எடுத்த போதும், போராடி வென்ற ரவிக்குமார் தாஹியாவை இந்தியர்கள் பாராட்டி வருகின்றனர். அதேவேளையில், இதுபோன்ற விதிமீறல்களை ஒலிம்பிக் கமிட்டியினர் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

Views: - 412

0

0