மரண காட்டு காட்டிய ரிஷப் பண்ட் சதம்…வெளுத்து வாங்கிய வாஷிங்டன்… கதறிய இங்கிலாந்து பவுலர்கள்!

5 March 2021, 5:20 pm
Quick Share

இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்டில் இந்திய வீரர் ரிஷப் பண்ட் சதம் விளாசி அசத்த இந்திய அணி வலுவான முன்னிலை பெற்றது. இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இந்திய அணி 2-1 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தின் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது.

இதில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முதல் இன்னிங்சில் 205 ரன்களுக்கு சுருண்டது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 1 விக்கெட்டுக்கு 24 ரன்கள் எடுத்து 181 ரன்கள் பின் தங்கியிருந்தது. ரோஹித் சர்மா (8), புஜாரா (15) அவுட்டாகாமல் இருந்தனர்.

ரோஹித் ஆறுதல்
இன்றைய இரண்டாவது நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணிக்கு புஜாரா (17) லீச் சுழலில் சிக்கினார். அடுத்து வந்த இந்திய கேப்டன் விராட் கோலி, ரன் எதுவும் எடுக்காமல் ஸ்டோக்ஸ் வேகத்தில் அவுட்டானார். ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா (49) ஓரளவு கைகொடுத்தார்.

பண்ட் மிரட்டல்
ரஹானே (27) நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. பின்வந்த ரிஷப் பண்ட் துவக்கத்தில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். போகப் போக பண்ட் வேகம் எடுத்தர். இதற்கிடையில் லீச் சுழலில் அஸ்வின் (13) விக்கெட்டை பறிகொடுத்து அஸ்வின் வெளியேறினார்.

சீரான இடைவெளியில் பவுண்டரிகள் விளாசிய பண்ட் அரைசதம் கடந்தார். இவருக்கு வாஷிங்டன் சுந்தர் நல்ல கம்பெனி கொடுக்க இந்திய அணியின் ரன் வேகம் அதிகரித்தது. தொடர்ந்து 80 ஓவர்களுக்கு பின் புதிய பந்தை இங்கிலாந்து அணி எடுத்த பின், டெஸ்ட் போட்டியின் மனநிலையை மாற்றிக்கொண்டு பண்ட் டி-20 கிரிக்கெட் ஸ்டைலுக்கு மாற்றினார்.

சேவாக் ஸ்டைலில்
இதற்கு பின் அசுரவேகத்தில் ரன்கள் சேர்த்த ரிஷப் பண்ட், இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஆண்டர்சன் பந்தில் ரிவர்ஸ் சுவீப் மூலம் பவுண்டரி விளாச, ஒட்டுமொத்த இங்கிலாந்து அணி வீரர்களுக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. தனது அதிரடியைத் தொடர்ந்த ரிஷப் பண்ட், சேவாக் ஸ்டையில் சிக்சர் அடித்து தனது மூன்றாவது சதத்தை பூர்த்தி செய்தார்.

ஆனால் அடுத்த சில நிமிடத்திலேயே ஆண்டர்சன் வேகத்தில் வீழ்ந்தார். எதிர்முனையில் இவருக்கு நல்ல கம்பெனி கொடுத்த வாஷிங்டன் சுந்தர் அரைசதம் கடந்தார். இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 294 ரன்கள் எடுத்து 89 ரன்கள் முன்னிலை பெற்றது. வாஷிங்டன் சுந்தர் (60), அக்‌ஷர் படேல் (11) அவுட்டாகாமல் உள்ளனர்.

Views: - 1

0

0