111 ரன்களுக்கு மும்பை ஆல் அவுட்…! ஹாட்ரிக் விக்கெட் எடுத்த ஹர்ஷல் படேல்!!!

Author: Udhayakumar Raman
26 September 2021, 11:52 pm
Quick Share

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பெங்களூர்-மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டியில் மும்பை அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, பெங்களூர் அணி பேட்டிங் செய்தது. ஆனால் தொடக்க ஆட்டக்காரர் தேவதத் படிக்கல் ரன் ஏதுமின்றி வெளியேறி அதிர்ச்சி அளித்தார். ஆனால் கேப்டன் கோஹ்லி மும்பை பவுலர்களை சிதறடித்து 51 ரன்கள் (42 பந்துகள், 3 பவுண்டரி, 3 சிக்ஸர்) விளாசினார். தன் பங்கிற்கு 32 ரன்கள் (24 பந்துகள், 2 பவுண்டரி, 2 சிக்ஸர்) எடுத்த நிலையில் பாரத் பெவிலியன் திரும்பினார். அதன் பின்னர் டிவில்லியர்ஸ் (11), ஷாபாஸ் அகமது (1) என வரிசையாக பேட்ஸ்மேன்கள் வெளியேறினர். மறுமுனையில் அதிரடி காட்டிய மேக்ஸ்வெல் 56 ரன்கள் (37 பந்துகள், 6 பவுண்டரி, 3 சிக்ஸர்) அடித்து ஆட்டமிழந்தார்.

இறுதியில் 20 ஒவர்களின் முடிவில் பெங்களூர் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ரன்கள் குவித்தது. மும்பை தரப்பில் பும்ராஹ் 3 விக்கெட்டுகள் மற்றும் ட்ரெண்ட் போல்ட், ஆடம் மில்னே, ராகுல் சாஹர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். அடுத்து 167 ரன்கள் இலக்கை நோக்கி மும்பை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் டி காக் ஆகொய்ரோ ஆரம்ப பெங்களூர் பந்துவீச்சை நாலாபுறமும் தெறிக்க விட்டனர். ஸ்கோரினை மளமளவென உயர்த்திய இந்த ஜோடியால் மும்பை எளிதில் வெற்றி பெரும் நிலைக்கு சென்றது. நல்ல நிலையை எட்ட அடித்தளம் அமைத்த ரோஹித் 43 ரன்களில் (28 பந்துகள், 5 பவுண்டரி, 1 சிக்ஸர்) விளாசி ஆட்டமிழந்தார்.

டி காக் 24 ரன்கள் (23 பந்துகள், 4 பவுண்டரி) எடுத்து வெளியேறினார்.அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர். இஷான் கிஷன் (9), சூரியகுமார் யாதவ் (8), க்ருனால் பாண்டியா (5), பொல்லார்ட் (7), ஹர்டிக் (3) என சொற்ப ரன்களில் வெளியேறினர். பெங்களூர் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் 18.1 ஓவர்களில் 111 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது மும்பை இந்தியன்ஸ். இதன் மூலம் பெங்களூர் 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. பெங்களூர் தரப்பில் ஹர்ஷல் படேல் 4 விக்கெட்டுகளும், சஹல் 3 விக்கெட்டுகளும், மேக்ஸ்வெல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதில் ஹர்ஷல் படேல் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தார்.

Views: - 326

0

0