தென் ஆப்ரிக்கா, ஜிம்பாப்வே தொடர்களில் இருந்து விலகிய பாக் வீரர்!

5 April 2021, 9:07 pm
Quick Share

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் இருந்தும் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் இருந்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஷதாப் கான் விலகியுள்ளார்.

தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரண்டு போட்டியின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று 1-1 எனத் தொடர் சமநிலையில் உள்ளது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஷதாப் கான் பேட்டிங் செய்தபோது காயமடைந்தார்.

இதற்காக இவருக்கு எக்ஸ்ரே எடுத்துப் பார்த்த போது அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது. ஆனால் இந்த காயம் மிகப் பெரிய அளவில் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இந்த காயத்திலிருந்து முழுமையாகக் குணமடைய 4 வாரங்கள் தேவைப்படும் என்பதால் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் இருந்தும் அடுத்து நடக்கவுள்ள ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் இருந்து விலகியுள்ளார். இந்நிலையில் நாளை மறுநாள் நடக்க உள்ள தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டி முடிந்த பின் அவர் தாயகம் திரும்புவார் என்று தெரிகிறது.

இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. டி20 போட்டிகள் வரும் ஏப்ரல் 10ம் தேதி துவங்குகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அடுத்தடுத்து ஷதாப் கான் காயமடைவது தொடர்கதையாகவே உள்ளது. இதற்கு முன்பாக நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்ற போதும் இவருக்கு உடற்தகுதி பிரச்சினை ஏற்பட்டது. ஆனால் அதைத் தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடந்த டி20 போட்டிகளில் கேப்டனாக நின்று வழி நடத்தினார் ஷதாப் கான்.

Views: - 2

0

0