ஐபிஎல் கிரிக்கெட்டில் பவுண்டரியில் புது சாதனை படைத்த தவான்!

10 April 2021, 11:56 pm
Quick Share

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது லீக் போட்டியில் அரைசதம் விளாசிய ஷிகர் தவான் பவுண்டரியில் புது சாதனை படைத்து அசத்தினார்.

இந்தியாவில் 14வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நேற்று துவங்கி நடக்கிறது . மும்பையின் வான்கடே மைதானத்தில் இன்று நடந்த இரண்டாவது லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொண்டது.
இதில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. டெல்லி அணிக்கு கிறிஸ் வோக்ஸ் மற்றும் டாம் கரண் அறிமுக வீரர்களாக வாய்ப்பு பெற்றனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பில் மொயின் அலி அறிமுக வீரராக களமிறங்கினார். இதையடுத்து களமிறங்கிய சென்னை அணிக்கு
மொயின் அலி (36), ரெய்னா (54), ரவிந்திர ஜடேஜா (26*), சாம் கரண் (34) ஆகியோர் கைகொடுக்க, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 188 ரன்கள் அடித்தது.

எட்டக்கூடிய இலக்கை துரத்திய டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு அனல் பார்மில் உள்ள பிரித்வீ ஷா (72), ஷிகர் தவன் (85) ஜோடி அரைசதம் கடந்து அசத்த, டெல்லிகேபிடல்ஸ் அணி 18.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 190 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

600 பவுண்டரிகள்
இந்த போட்டியில் 10 பவுண்டரிகள் விளாசிய ஷிகர் தவான் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 600 பவுண்டரிகளை விளாசிய முதல் வீரர் என்ற பெருமை பெற்றார். இதுவரை 177 போட்டிகளில் விளையாடியுள்ள தவான் மொத்தமாக 601 பவுண்டரிகள் அடித்துள்ளார். இவரைத் தொடர்ந்து டேவிட் வார்னர் (510 பவுண்டரிகள்), விராட் கோலி (507), சுரேஷ் ரெய்னா (496), காம்பிர் (491) ஆகியோர் அடுத்த 4 இடத்தில் உள்ளனர்.

அதேபோல ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தவான் தனது 42வது அரைசதத்தை பதிவு செய்தார். இதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அதிக அரைசதம் அடித்த வீரர்கள் பட்டியலில் டேவிட் வார்னரை (48 அரைசதம்) தொடர்ந்து தவான் இரண்டாவது இடம் பிடித்தார். இந்த பட்டியலில் சுரேஷ் ரெய்னா (39), விராட் கோலி (39), ரோகித் சர்மா (39) ஆகியோர் அடுத்த மூன்று இடங்களில் உள்ளனர்.

Views: - 104

0

0