தென் ஆப்ரிக்க தொடரை ஒத்திவைத்த ஆஸி…: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் போட்டியில் இருந்து வெளியேறிய பரிதாபம்!

2 February 2021, 7:41 pm
SA - AUS - updatenews360
Quick Share

தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான தொடரை ஒத்தி வைத்ததன் மூலம் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான பைனல் போட்டியில் இருந்து விலகியுள்ள நிலை ஏற்பட்டுள்ளது.

தென் ஆப்ரிக்கா செல்லவிருந்த ஆஸ்திரேலியா அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இருந்தது. ஆனால் தென் ஆப்பிரிக்காவில் கொரோன வைரஸ் இரண்டாவது அலை வீச துவங்கி உள்ளதால், அங்கு செல்வது பாதுகாப்பற்ற சூழல் இல்லை எனக் கருதிய கிரிக்கெட் ஆஸ்திரேலியா இந்த தொடரை ஒத்தி வைத்துள்ளதாக அறிவித்துள்ளது. இதனால் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் போட்டியிலிருந்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கிட்டத்தட்ட வெளியேறிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரியான நிக் ஹாக்லே வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனுபவம் மிகுந்த மருத்துவ குழுவினருடன் நடத்திய ஆலோசனையில் ஆஸ்திரேலியாவிலிருந்து தென் ஆப்ரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொள்வது வீரர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான நிலை எனத் தெரியவந்துள்ளது. இந்த தொடரைத் திட்டமிட தென்னாப்பிரிக்க கிரிக்கெட் போர்டு கடினமான உழைப்பை மேற்கொண்டது.

அதற்கு இணையாக கிரிக்கெட் ஆஸ்திரேலியாவும் இந்த தொடரை நடத்தி முடிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் இந்த முடிவை தற்போது சுலபமாக எடுத்து விடவில்லை சர்வதேச அளவில் தற்போதைய நிலையில் கிரிக்கெட்டை நடத்துவதற்கு பல்வேறு கிரிக்கெட் போர்டும் தென் ஆப்ரிக்க கிரிக்கெட் போடும் எடுத்த முயற்சிகளை கருத்தில் கொண்டு வேறு வழியில்லாமல் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் தென் ஆப்ரிக்காவின் உறவை நாங்கள் பெரிதும் மதிக்கிறோம். கொரோன வைரஸ் பரவல் துவங்கிய காலத்திலிருந்து ஆரோக்கியம், மற்றும் மக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனால் இந்த கடினமான காலகட்டத்தில் எந்தவித ரிஸ்க்கும் எடுக்க விரும்பவில்லை இந்த தொடரை தற்போது நடத்தப்படவில்லை என்றாலும் விரைவில் இந்த தொடரை நடத்துவதற்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும். இதற்கிடையில் தென் ஆப்பிரிக்க மக்களுக்குத் தடுப்பூசி வெற்றிகரமாகக் கொண்டு சென்று மீண்டும் விரைவாக இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப எங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்” என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் இந்த அறிக்கை மூலம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் வரும் ஜூன் மாதம் நடக்க உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு ஆஸ்திரேலிய அணியின் கையை விட்டு நழுவிச் சென்று உள்ளது எனலாம். தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் காணப் புள்ளி பட்டியலில் இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு அடுத்து ஆஸ்திரேலிய அணி மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்நிலையில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணி இரண்டு போட்டிகள் வென்றிருந்தால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு இருந்தது.

ஆனால் இந்த தொடரை தற்போது தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது ஆஸ்திரேலிய அணி கிட்டத்தட்ட இந்த தொடரில் இருந்து வெளியேறியதாக கருதப்படுகிறது. அதேபோல கொரோனா வைரஸ் காரணமாக கிரிக்கெட் தொடரை ஆஸ்திரேலிய அணி ஒத்தி வைப்பது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே வங்கதேச அணிக்கு எதிரான தொடரை ஒத்திவைத்தது. ஆஸ்திரேலிய அணி தற்போது வங்கதேசம் மற்றும் தென் ஆப்ரிக்க தொடருக்கான அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. இதேபோல தென் ஆப்ரிக்காவில் நடக்கும் கிரிக்கெட் தொடர் கொரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்படுவதும் முதல் முறை அல்ல. கடந்த ஆண்டில் இங்கிலாந்து அணி தென் ஆப்ரிக்காவில் பங்கேற்ற ஒருநாள் தொடரின் போது ஹோட்டலில் பணியாளர்களுக்குச் சிலருக்கு கொரோனா பரவியதால் பாதியில் தொடரில் இருந்து வெளியேறியது.

Views: - 0

0

0