பந்தில் எச்சில் தடவிய ஸ்டோக்ஸ்… எச்சரித்த அம்பயர்கள்!

24 February 2021, 10:24 pm
Quick Share

இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் பந்தில் எச்சில் தடவியதால் அம்பயர்கள் அவரை எச்சரிக்கை செய்தனர்.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று சமநிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் இன்று துவங்கியது.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். ஆனால் இந்திய சுழற்பந்து வீச்சாளர்களைச் சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் திணறினர். இதையடுத்து இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 112 ரன்களுக்கு சுருண்டது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு புஜாரா டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். ஆனால் ரோஹித் சர்மா அரைசதம் விளாசி அசத்த இந்திய அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

இதற்கிடையில் இந்திய அணி பேட்டிங் செய்த போது 12 ஆவது ஓவரில் பந்தை பளபளப்பாக்க இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் பந்தில் எச்சில் தடவினார். இதையடுத்து களத்தில் இருந்த அம்பயர் நிதின் மேனன் அவரை அழைத்து எச்சரிக்கை செய்தார். இதையடுத்து பந்தை அம்பயர் சானிடைஸ் செய்தார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாகக் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச கிரிக்கெட் கவுண்சிலான ஐசிசி பந்தில் எச்சில் பயன்படுத்தத் தடைவிதித்தது.

இந்த விதிகளின்படி அம்பயர் இரண்டு முறை இந்த செயலில் ஈடுபடும் அணிக்கு எச்சரிக்கை கொடுக்கலாம். தொடர்ந்து மீண்டும் அந்த அணி இந்த செயலில் தொடர்ந்து ஈடுபடும் பட்சத்தில் எதிரணிக்கு அம்பயர் 5 ரன்கள் அபராதமாக வழங்கலாம். அதே போலப் பந்தில் எச்சில் தடவப்பட்ட பின் அம்பயர் மீண்டும் அதை சானிடைஸ் செய்த பின் தான் போட்டியைத் துவங்கவேண்டும்.

இதற்கிடையில் இந்த கட்டுப்பாடு பவுலர்களுக்கு பெரும் தலைவலியாக உள்ளது. கொரோனா வைரஸ் விதிகளுக்கு முன்பாக பந்தில் பளபளப்புத் தன்மை சென்ற பின் பவுலர்கள் அல்லது சகவீரர்கள் பந்தை எச்சில் தடவி செயற்கையான பளபளப்பை உருவாக்குவார்கள். இதன்மூலம் பவுலர்கள் எதிர்பார்க்கும் படி சுவிங் செய்த இது பெரிய அளவில் கைகொடுக்கும். தற்போது இந்த கட்டுப்பாடு மூலம் பவுலர்கள் எதிர்பார்க்கும் ஸ்விங்கை பெற முடியாமல் திணறுகின்றனர்.

Views: - 9

0

0