இந்த முறையும் பேட்டிங் சொதப்பல் : சென்னை அணிக்கு மேலும் ஒரு தோல்வி….!

Author: Udayaraman
2 October 2020, 11:48 pm
Quick Share

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஐதராபாத்திற்கு இன்றைய லீக் ஆட்டத்தில் சென்னை அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய அந்த அணிக்கு பேர்ஸ்டோ முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்து அதிர்ச்சி கொடுத்தார். இதைதொடர்ந்து, சென்னை அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசியதால், வார்னர் (28), மணீஷ் பாண்டே(29), வில்லியம்சன் போன்ற முன்னணி வீரர்கள் பெவிலியன் நோக்கி நடையை கட்டினர்.

முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை இழந்ததால், ஐதராபாத் அணி, குறிந்த ரன்னில் சுருண்டு விடும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், ஜோடி சேர்ந்த இளம் வீரர்கள் கார்க் மற்றும் அபிஷேக் சர்மா, யாரும் எதிர்பார்க்காத விதமாக அதிரடி காட்டினர். கார்க் அரைசதம் விளாச, ஐதராபாத் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் சேர்த்தது.

165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு இந்த முறையும் தொடக்கம் சரியாக அமையவில்லை. வார்னர், டூபிளசிஸ், ராயுடு, கேதர் ஜாதவ் ஆகியோரின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து, சென்னை அணி திணறியது.

பின்னர், இணைந்த தோனி, ஜடேஜா ஜோடி நிதானாமாக ஆடி ரன்களை சேர்த்தது. ஆரம்பத்தில் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜடேஜா 34 பந்துகளில் அரைசதம் கடந்து ஆட்டமிழந்தார். இதைத்தொடர்ந்து வந்த சாம் கரன், தோனியும் அதிரடியாக விளையாடினார். இருப்பினும் கடைசி ஓவரில் 28 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அந்த அணியால் 21 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம், 7 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வியை தழுவியது. தோனி கடைசி வரையிலும் ஆட்டமிழக்காமல் 47 ரன்கள் எடுத்தார்.

மேலும், விளையாடிய 4 போட்டிகளில் 3ல் தோல்வியை சந்தித்துள்ள சென்னை அணி, புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திலேயே நீடிக்கிறது.

Views: - 49

0

0