ரோகித், கேஎல் ராகுலை விட இது ஸ்பெஷல்… இதுவரை இந்திய வீரர்கள் படைக்காத சாதனையை படைத்த சூர்யகுமார் யாதவ்..!!

Author: Babu Lakshmanan
7 January 2023, 9:54 pm
Quick Share

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த இலங்கை அணி, நேற்று முன்தினம் 2வது டி20 போட்டியில் மோதியது. புனேவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதில், கேப்டன் ஷனாகாவின் அதிரடி அரைசதத்தினால் இலங்கை அணி 207 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இதைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணிக்கு, அக்ஷர் படேல், சூர்யகுமார் யாதவ் அதிரடி காட்டினாலும் 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இதனால், 3 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலை அடைந்தது.

இந்த நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதல் ஓவரிலேயே இஷான் கிஷான் ஏமாற்றம் அளித்தாலும், அடுத்து வந்த திரிபாதி, கில், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அதிரடியாக ஆடினர். குறிப்பாக, சூர்யகுமார் யாதவ் ருத்ரதாண்டவம் ஆடினார்.

பந்தை எந்த திசையில் போட்டாலும் சிக்சர்களாக பறக்கவிட்டார். இதனால், அவர் 45 பந்துகளில் சதம் விளாசினார். இதன்மூலம், இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் சேர்த்தது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் சூர்யகுமார் யாதவ் 112 ரன்கள் சேர்த்தார்.

இதுவரையில் சர்வதேச டி20 போட்டிகளில் 3 சதங்களை சூர்யகுமார் யாதவ் அடித்துள்ளார். குறைந்த பந்துகளில் அதிவேக சதம் விளாசிய டாப் 5 இந்திய வீரர்கள் பட்டியலில் சூர்யகுமார் யாதவ் 2வது இடத்தை பிடித்துள்ளார்.

முதல் இடத்தில் ரோகித் சர்மா (35), சூர்யகுமார் யாதவ் (45), கேஎல் ராகுல்(46), 4 மற்றும் 5வது இடத்தில் சூர்யகுமார் யாதவ் உள்ளார். அதுமட்டுமில்லாமல், தொடக்கவீரராக இல்லாமல், பிற வரிசைகளில் இறங்கி 3 சதங்களை விளாசிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

Views: - 282

0

0