2வது டி20 மகளிர் கிரிக்கெட் போட்டி : இந்திய வீராங்கனைகள் சொதப்பல் ஆட்டம்… கடைசியில் வென்ற ஆஸி.,!!
Author: Babu Lakshmanan9 October 2021, 6:36 pm
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டி20 மகளிர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டித் தொடர் முடிவடைந்த நிலையில், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்போது நடந்து வருகிறது. முதல் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் 2-வது டி20 போட்டி கராரா ஓவல் மைதானத்தில் இன்று நடந்தது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய இந்திய அணியின் வீராங்கனைகள் சொதப்பினர். கேப்டன் ஹர்மன் ப்ரீத் கவுர் (28) ஓரளவுக்கு ரன்களை சேர்த்தார். பின்னர் வந்த வீராங்கனைகள் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பிய நிலையில், வஸ்த்ரகர் மட்டும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 37 ரன்கள் எடுத்து, அணியின் ரன் குவிப்புக்கு காரணமானார்.
20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் சேர்த்தது.
119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி, ஆரம்பத்தில் விக்கெட்டுக்களை இழந்து தடுமாறினர். ஆனால், மூனே (34), மெக்ராத் (42 நாட் அவுட்) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால், ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அந்த அணி, 3 போட்டிகள் கொண்ட தொடரில் முன்னிலை வகிக்கிறது.
0
0